தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்:
தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை, ஏப்., 14ல் வெளியிடுவதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வெளியிடட்டும்; அது அவருடைய இஷ்டம். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்.
‘நாங்க எந்த ஊழலும் செய்யலை… அதனால, பட்டியல் எல்லாம் வெளியிட முடியாது’ன்னு தானே இவர் சொல்லியிருக்கணும்… ஆனா, ‘ஊழல் செய்வது எங்க உரிமை; அதை வெளியிடுவது அண்ணாமலையின் கடமை’ என்பது மாதிரி சொல்றாரே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம்:
தி.மு.க., ஆட்சியில், ‘ஆன்லைன்’ சூதாட்டம், விலைமதிக்க முடியாத இளைஞர்களின் உயிரை பறித்துக் கொண்டிருக்கிறது. முக்கிய எதிர்க்கட்சிகளின் ஆலோசனையை பெறாமல், அரைவேக்காட்டு தனமாக ஒரு சட்டத்தை தமிழக அரசு இயற்றியது. அரசும், கவர்னரும் மறைமுகமாக தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டு, நாடகம் நடத்தி வருவதாக தெரிகிறது.
அ.தி.மு.க.,வினர் பா.ஜ.,வை மட்டும் தான் வம்புக்கு இழுத்தாங்க என்று பார்த்தால், கவர்னரையும் சாட ஆரம்பிச்சிட்டாங்களே… ஒரு முடிவோட தான் இருக்காங்க போலும்!
நாம் தமிழர் என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை துவங்குவதற்கு, தங்கள் நிலங்களை விட்டுக் கொடுத்த பூர்வக்குடி தமிழர்கள், தற்போது, வெறும் கூலிகளாக மட்டுமே வேலை செய்யக் கூடிய அவலம் நிலவுகிறது. அந்த அளவிற்கு நெய்வேலி நிறுவனத்தில் வட மாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி, மண்ணின் மைந்தர்கள் இல்லாத கொடுஞ்செயல் உள்ளது.

இப்பத் தான் வட மாநிலத்தவர் பிரச்னை முடிஞ்சிருக்குது… மறுபடியும் இவர், முதல்ல இருந்து ஆரம்பிக்க பார்க்கிறாரே!
தி.மு.க., நெசவாளர் அணி மாநில துணைத்தலைவர் நாகலிங்கம் அறிக்கை:
தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, கைத்தறி நெசவாளர்களுக்கு, 300 யூனிட்டும், விசைத்தறி நெசவாளர்களுக்கு, 100 யூனிட்டும் விலையில்லா மின்சாரம் வழங்கி, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி தந்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள்.
எங்களது வாழ்வாதாரம், முன்னேற்றத்திற்கான இந்த அறிவிப்பால், நெசவாளர்களின் வயிற்றில் பால் வார்க்கப்பட்டுள்ளது. இவருக்கு இந்தப் பதவியை கொடுத்ததற்கான, பிரதிபலனை கனகச்சிதமா செய்து முடிச்சிட்டாரு!
திருச்சி தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., குமார் பேச்சு:
கடந்த லோக்சபா தேர்தலில், கூடா நட்பாக, பா.ஜ.,வுடன் கூட்டணி இருந்ததால், சிறுபான்மையினர் எதிராக ஓட்டு போட்டதால், நான் இந்த தொகுதியில் தோற்றேன். பா.ஜ., கூட்டணியால் தான், கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வும் தோல்வியை தழுவியது.
இப்ப இவ்வளவு வெட்டி நியாயம் பேசுறவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவங்க ஆதரவு வேண்டாம்னு தலைமையிடம் அடிச்சு பேசியிருக்கலாமே!
முதல்வர் ஸ்டாலினிடம் கன்னியாகுமரி காங்., – எம்.பி., விஜய் வசந்த் வழங்கிய மனு:
தேங்காய் பட்டணம் துறைமுக விரிவாக்க பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கன்னியாகுமரி விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, நெய்யார் இடது கரை கால்வாயில் தண்ணீர் திறந்து விட, கேரள அரசுடன் சுமுகமாக பேசி தீர்வு காண வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில், தொழில்நுட்பவியல் பூங்கா அமைத்து தரவேண்டும்.
இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில், தங்கள் திறமையை மேம்படுத்த, விளையாட்டு அரங்கம் அமைத்து தர வேண்டும்.முதல்வர் மகன் உதயநிதியின் விளையாட்டு துறை சார்ந்த கோரிக்கைகள் மட்டும் உடனே நிறைவேறும்… மற்றவைகளுக்கு நீங்க காத்திருந்து தான் ஆகணும்!
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
‘நாடு முழுதும், 60 கி.மீ.,க்கு ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இருக்கும் வகையில், அவை சீரமைக்கப்படும். கூடுதல் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும்’ என, 2021 மார்ச் 22-ம் தேதி லோக்சபாவில், மத்தியநெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருந்தார். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சுங்கக் கட்டண உயர்வை அரசு கைவிட வேண்டும். மாறாக தமிழகத்தில், 60 கி.மீ.,க்கு ஒன்று என்ற அளவில், சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

இவரை மாதிரி ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும், இதற்காக குரல் கொடுக்கலாம்… ஆனால், கொடி கட்டிய கார்களை மட்டும் வரி கட்டாம போக சுங்கச்சாவடிகள்அனுமதிக்குதே… அப்புறம் எப்படி குரல் கொடுப்பாங்க?
அனைத்து மக்கள் அரசியல்கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:
பெண் என்றாலே, போதை என்று எண்ணும் ஆண்களின் எண்ணிக்கை என்றைக்கு குறைகிறதோ, அன்று தான், மகளிருக்கான இடமாக இந்த பூமி மாறும். பெண்ணை அழகானவள் என்று புகழாமல், அறிவானவள் என்று எப்போது புகழ்கிறோமோ, அன்றே பெண்களின் முன்னேற்றம் துவங்கும்.
ஒரு காலத்தில், அரசியல் கட்சிகளில் பெண்கள் உறுப்பினரா சேர்வதே அரிது… இப்ப இவங்க மாதிரி பெண்களே தனி கட்சி, சமுதாய அமைப்பு, தன்னார்வ அமைப்புன்னு துவங்கி அசத்துறாங்களே… இது தானே முன்னேற்றம்!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
சொத்து வரி, தொழில் வரி என, எல்லா வரிகளையும் உயர்த்தி வருவாய் ஈட்டும், சென்னை மாநகராட்சியின் அனைத்து தெருக்களும் அலங்கோலமாக இருக்கின்றன. எதற்காக, யாருக்காக காத்திருக்கிறது. உடனடியாக அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டியது மாநகராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு.

எல்லா சாலைகளையும், இப்பவே சிங்கப்பூர் மாதிரி மாத்திட்டா, எதிர்காலத்துல, ‘சிங்கார சென்னை 3.0, 4.0’ திட்டமெல்லாம் வகுக்கும் போது என்ன செய்வாங்க?
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்