எந்தவித பயமும் வேண்டாம்: பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: “பொதுத் தேர்வு எழுதும் உங்களுக்கு தேவையானது எல்லாம் தன்னம்பிக்கையும், மன உறுதியும் தான். அது இருந்தாலே நீங்கள் பாதி ஜெயித்து விட்டீர்கள். தேர்வு என்பது உங்களை பரிசோதிப்பது இல்லை, உங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கொண்டு போவது, உயர்த்தி விடுவது. அதனால் மீண்டும் சொல்கிறேன், எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “என் பேரன்பிற்குரிய 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத இருக்கின்ற மாணவ, மாணவிகளே அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.

என்ன பரீட்சை கவலையில் இருக்கிறீர்களா? ஒரு கவலையும் வேண்டாம், எந்த பயமும் வேண்டாம். இது இன்னொரு பரீட்சை, அவ்வளவுதான். அப்படித்தான் இதை நீங்கள் அணுக வேண்டும். எந்தக் கேள்வியாக இருந்தாலும் நீங்கள் படிக்கிற புத்தகத்தில் இருந்துதான் வரப்போகிறது. அதனால் உறுதியோடு தேர்வை எழுதுங்கள்.


— M.K.Stalin (@mkstalin) March 12, 2023

உங்களுக்கு தேவையானது எல்லாம் தன்னம்பிக்கையும், மன உறுதியும் தான். அது இருந்தாலே நீங்கள் பாதி ஜெயித்து விட்டீர்கள். தேர்வு என்பது உங்களை பரிசோதிப்பது இல்லை, உங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கொண்டு போவது, உயர்த்தி விடுவது. அதனால் மீண்டும் சொல்கிறேன், எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்.

தேர்வைப் பார்த்து பயம் வேண்டாம். பாடங்களை ஆழ்ந்து படியுங்கள். புரிந்து படியுங்கள். விடைகளை தெளிவாக, முழுமையாக எழுதுங்கள். நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். அந்த வெற்றிக்காக உங்கள் பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் போல நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். முதல்வராக மட்டுமல்ல, உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாழ்த்துகிறேன், நல்வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.