சென்னை: குறிப்பிட்ட சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், வட மாநிலத் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு குறிப்பிட்ட சமுதாயம் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சீமானுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், சர்ச்சை கருத்து குறித்து சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன்படி கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கில், வடமாநில தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதாக கூடுதல் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, “தமிழகத்தில் இந்தி பேசுபவர்களுக்கு எதிராக வெளிப்படையாக வன்முறை தூண்டப்படுகிறது” என்று பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டி இருந்தார். மேலும், இவர்களைப் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.