வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவையை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் மண்டலத்திற்குட்ட பகுதிகளில், ரூ.60 கோடி மதிப்பீட்டில் நங்கநல்லூர் ராம்நகர் மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள், பழவந்தாங்கல் பி.வி.நகரில் நாய் இனபெருக்க கட்டுபாட்டு மையம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பகுதியில் உள்ள 67 தெருக்களில் மழைநீர் கால்வாய், 71 சாலைகள் மேம்பாடு போன்ற திட்டட்பணிகளின் தொடக்க விழா ஆதம்பாக்கம் நிலமங்கை நகர் வள்ளலார் தெருவில் நேற்று நடந்தது. ஆலந்தூர் மண்டலக்குழு தலைவர் என். சந்திரன் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் பாஸ்கரன், பொறியாளர்கள் வளர்மதி, முருகவேல், பெண் கவுன்சிலர் பூங்கொடி ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு திட்டப் பணிகளை தொடக்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், ‘‘வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. தற்போது பணி விரைவாக நடந்து வருகிறது. ஓரிரு மாதங்களில் ரயில் இயக்கத்தை முதல்வர் தொடக்கி வைப்பார். மழை வெள்ளத்தினால் மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக, மழைநீர் கால்வாய்கள் அமைக்க முதல்வர் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.  ஐயப்பந்தாங்கல், பரணிபுத்தூர் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க ரூ.120 கோடியில் பணிகள் நடந்து வருகிறது. இனி மழைகாலங்களில் அந்த பகுதி குடியிருப்புகளில் மழைநீர் தேங்காது,’’ என்றார். நிகழ்ச்சியில், மாநகராட்சி கவுன்சிலர்கள்  துர்காதேவி நடராஜன், தேவி ஏசுதாஸ், பாரதிகுமரா, அமுதபிரியா, செல்வேந்திரன், சாலமோன், நாஞ்சில் சுதாபிரசாத், திமுக நிர்வாகிகள் கே.ஆர்.ஜெகதீஸ்வரன், ஜெ. நடராஜன், லியோ பிரபாகரன், ஆர். பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.