வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புவனேஸ்வர் : ஒடிசாவில், 59 பேருக்கு ‘எச்3என்2 இன்ப்ளூயன்ஸா’ தொற்று கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, மாநில அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.
‘இன்ப்ளூயன்ஸா ஏ’ வைரசின் உட்பிரிவுகளான எச்1என்1 மற்றும் எச்3என்2 வகை வைரஸ் காய்ச்சல் நாடு முழுதும் பரவி வருகிறது.
பிரச்னை
இந்த தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், சளி, உடல்வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும் என கூறப்படுகிறது. டிசம்பரில் துவங்கி மார்ச் மாதம் வரை இந்த வைரஸ் பரவல் தீவிரமாக இருக்கும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இம்மாத இறுதியில் இதன் தாக்கம் குறையத்துவங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஒடிசாவில் 59 பேருக்கு எச்3என்2 வகை வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் ஷாலினி பண்டிட் கூறியதாவது:
இன்ப்ளூயன்ஸா காய்ச்சல் மற்றும் மூச்சுக்குழாயில் தீவிர தொற்று ஏற்படுத்தும் அறிகுறிகள் குறித்து கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பெரும்பாலானவர்களுக்கு இந்த காய்ச்சல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
வாய்ப்பு
இணை நோய் உள்ளவர்கள், முதியவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் 90 சதவீதம் பேர் தானாகவே குணம் அடைகின்றனர். 10 சதவீதம் பேருக்கு தான் மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் தொடர் இருமல் ஏற்பட்டு சிகிச்சை தேவைப்படுகிறது.
கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வது, கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். மாநில அரசின் அனைத்து பரிசோதனை கூடங்களும் தயார் நிலையில் உள்ளன. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement