பாடசாலைப் புத்தகங்களுக்கான இந்திய ஆதரவு  இலங்கையின் சிறந்த எதிர்காலத்துக்கான முதலீடு

இலங்கையின் பல்வேறு பாகங்களிலுமுள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் மாணவர்களின் பயன்பாட்டுக்காக, இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் அரச அச்சக கூட்டுத்தாபனத்தில் அச்சிடப்பட்ட பாடசாலைப் புத்தகங்களின் விநியோகப்பணிகளை இலங்கையின் கல்வி அமைச்சர் டாக்டர் சுசில் பிரேமஜயந்த மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே ஆகியோர் இணைந்து 2023 மார்ச் 09 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தனர்.

கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ அ.அரவிந்த குமார் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் திரு.நிஹால் ரணசிங்கே உள்ளிட்ட அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 
2. உணவு, எரிபொருள், மருந்துப்பொருட்கள் மற்றும் உற்பத்தித் துறை சார்ந்த மூலப்பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்காக 2022 மார்ச்சில் இந்திய அரசாங்கத்தால் இலங்கை அரசுக்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடன் வழங்கப்பட்டது. இந்த கடனுதவியின்கீழ் அச்சிடல் காகிதம் மற்றும் ஏனைய மூலப்பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்காக அரச அச்சகக் கூட்டுத்தாபனமும் ஏனைய தனியார் நிறுவனங்களும் 10 மில்லியன் அமெரிக்க டொலரை பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2023 கல்வி ஆண்டிற்காக 4 மில்லியன் மாணவர்களுக்கு தேவைப்படும் பாடசாலைப் புத்தகங்களில் 45 வீதமானவற்றை இந்த உதவியை பயன்படுத்தி அச்சிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3. இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய உயர் ஸ்தானிகர், இலங்கையின் சிறந்த எதிர்காலத்துக்கான முதலீட்டில் இந்தியாவின் பங்களிப்பாகவே பாடசாலைப்புத்தகங்களை அச்சிடுவதற்காக வழங்கும் ஆதரவு பொன்ற முயற்சிகள் காணப்படுகின்றன எனக்குறிப்பிட்டதுடன், இவ்வாறான செயற்பாடுகள் மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்துக்கு பங்களிப்பினை வழங்குமெனவும் சுட்டிக்காட்டினார். கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவையும், பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கான காகிதத்தை இறக்குமதி செய்ய இந்திய கடனுதவி மூலம் சரியான நேரத்தில் உதவியதையும் கௌரவ கல்வி அமைச்சர் அவர்கள் பாராட்டினார். இதேவேளை, இக்கட்டான தருணங்களில் இலங்கை மக்களுக்கு இந்தியா ஆதரவளித்து வருவதை  கல்வி இராஜாங்க அமைச்சர் மெச்சியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பிரமுகர்கள் அரச அச்சக கூட்டுத்தாபனத்தை பார்வையிட்டதுடன் அதன் செயற்பாடுகள் குறித்து அதிகாரிகளால் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. 
4. இந்தியாவும் இலங்கையும் பன்முக அடிப்படையிலானதும் பல்துறைகளைச் சார்ந்ததுமான பங்குடைமையை கொண்டாடிவருகின்றன. இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின்கீழ் இலங்கை மக்களுக்காக சலுகைக் கடன் மற்றும் கடனுதவி போன்ற பல்வேறு வடிவங்களில் இந்தியாவின் உதவிகள்  வழங்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள், உரம் போன்றவற்றின்  விநியோகம், புகையிரதப் பாதை அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, பாதுகாப்புத்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறை  உட்பட பல்வேறு துறைகளிலும் இதுவரை 4 பில்லியனுக்கும் அதிக பெறுமதியான கடனுதவி திட்டங்கள் இலங்கைக்காக வழங்கப்பட்டுள்ளன. 
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
11 மார்ச் 2023  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.