35 வருஷம் கழித்து சந்தித்த ரியல் லைஃப் ராம் – ஜானு… வீடுதிரும்பாததால் ஏற்பட்ட விபரீதம்!

96 படத்தைப்போன்று, பள்ளிப் பருவத்தில் காதலித்த சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்த ஒரு காதல் ஜோடியொன்று, ஸ்கூல் ReUnion-ல் சந்தித்துள்ளனர். ஆனால் எதிர்பாரா விதமாக இந்த காதல் ஜோடி, குடும்பத்தைவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.
தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் 96. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை பிரேம்குமார் இயக்கி இருந்தார். இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற பள்ளிக்கூட காதல் காட்சிகள், தங்கள் பள்ளிக்கால காதலை நினைத்துப் பார்க்க வைத்ததாக பலரும் கூறிவந்தனர். பலரின் பல பள்ளி பருவ நட்பு வாட்ஸ்ஆப் குரூப்கள் ஆக்ட்டிவேட் ஆகின என்றே சொல்லலாம். தொடர் வரவேற்புகளால் மலையாளம், தெலுங்கு, கன்னடா என பல மொழிகளிலும், 96 படம் ரீமேக் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
image
96 படத்தில் பல வருடங்கள் கழித்து நடைபெறும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் ஹீரோவும் ஹீரோயினும் சந்தித்துக்கொள்வார்கள். அப்போது அவர்களுக்குள் இருந்த பழைய காதலை அவர்கள் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அதில் பள்ளி வயது வேடத்தில் ராம் (விஜய் சேதுபதி) கதாபாத்திரத்தில் ஆதித்யா பாஸ்கரும், ஜானுவாக கௌரி ஜி கிசானும் (த்ரிஷா) நடித்திருப்பர். இதில் சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் பிரிந்திருப்பர். விஜய் சேதுபதி, த்ரிஷா நினைவாக கல்யாணம் செய்துகொள்ளாமலேயே இருப்பார். த்ரிஷா வேறு ஒரு நபரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகியிருப்பதாகக் கதை பின்னப்பட்டிருக்கும். இருவரும் சந்தித்து, நினைவுகளை பகிர்ந்துகொண்டு பின் மீண்டும் பிரிந்து செல்வதாக கதை அமைக்கப்பட்டிருக்கும்.
இதேபோன்ற சம்பவமொன்று கேரளாவில் ஒரு சின்ன மாற்றத்துடன் நடைபெற்றுள்ளது. கேரள மாநிலம் ஏர்ணாகுளத்தில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு, 96 படக் காட்சியைப் போன்று பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. நிகழ்ச்சியில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சந்தித்துக்கொண்டுள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும் 50 வயதை அடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் 96 படத்தில் பள்ளிப் பருவத்தில் காதலித்த ராம் ஜானுவைப்போலவே, இங்குமொரு காதல் ஜோடி இருந்துள்ளனர். நிகழ்வில் பல வருடங்கள் கழித்து அவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
image
இதில் ட்விஸ்ட் என்னவென்றால், இவர்கள் இருவருக்குமே வேறு வேறு நபர்களுடன் திருமணமாகி குழந்தைகள் இருந்திருக்கின்றனர். பள்ளிப் பருவத்தில் காதலித்த இருவரும் அப்போது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் வீட்டில் நிச்சயிக்கப்பட்டவர்களை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அதன் பின்பு, அவர்களுக்குள் எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளது. இந்த நிலையில்தான் பள்ளிச் சந்திப்பில் சந்தித்துக்கொண்டுள்ளனர் இருவரும். சந்தித்து பேசத்தொடங்கிய இருவரும், நிகழ்வுக்குப்பிறகு வீடு திரும்பவில்லையென சொல்லப்படுகிறது.
வெகுநேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால் அவர்களின் குடும்பத்தினர் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு வழியாக வேளாங்கண்ணி சென்றதாகவும், பின்னர் காவல் நிலையத்தில் இருவரும் ஆஜராகி இருப்பதாகவும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– ஜெ.பிரகாஷ்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.