கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலில் மாசிக் கொடைவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்தாம் நாள் விழாவான நேற்று வரலாற்று சிறப்பு மிக்க ஒடுக்கு பூஜை நடைபெற்றது.
இந்த பூஜையின்போது குண்டூசி விழுந்தால் சப்தம் கேட்கும் அளவுக்கு நிசப்தம் நிலவியது.
மண்டைக்காடு ஸ்ரீபகவதி அம்மன் கோயில் அருகே அமைந்துள்ள ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் அருகில் 7 வகையான கூட்டு, சாம்பார் உள்ளிட்ட 5 வகையான குழம்புகள், அப்பளம் உள்ளிட்டவை அடங்கிய 15 உணவு பதார்த்தங்கள் தயார் செய்யப்பட்டு குருக்கள் தலையில் சுமந்து வரிசையாக வருவார்கள். அப்போது குருக்களின் வாயில் துணியைக் கட்டிக் கொண்டு வருவார்கள். குருக்கள் தலையில் சுமந்து வரும் உணவுகளின் மீது நீளமாக ஒரு வெள்ளைத் துணி போர்த்தப்பட்டிருக்கும்.
ஒற்றை முரசு, நாதஸ்வரம் ஒலிக்க உணவுப் பதார்த்தங்கள் அம்மனுக்கு எடுத்துவருவதை, ‘ஒடுக்கு பவனி’ என அழைப்பார்கள். ஒடுக்கு பவனியின்போது மண்டைக்காடு கோயில் வளாகத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களில் சிறு குழந்தைகூட சப்தம் எழுப்பாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர். இதுதான் இந்த பூஜையின் சிறப்பாகும்.

உணவுப் பதார்த்தங்கள் அம்மனின் கருவறைக்குக் கொண்டுச்செல்லப்பட்டு, அம்மனுக்குப் படைக்கப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ஒடுக்கு என்றால் மலையாளத்தில் நிறைவு என அர்த்தம். மாசிக்கொடைவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக அம்மனுக்கு உணவு ஊட்டுவதை ஒடுக்கு பூஜை என அழைக்கிறார்கள். ஒடுக்கு பூஜையின் பின்னணியில் மண்டைக்காடு அம்மன் ஒரு பக்தருக்கு உணவு அளித்த நிகழ்வு வரலாறாகக் கூறப்படுகிறது. மண்டைக்காடு கோயில் முன்பு ஓலைக் கொட்டகையாக இருந்திருக்கிறது. அப்போது கொல்லம் உள்ளிட்ட இடங்களிலிருந்து வியாபாரிகள் மாட்டுவண்டியில் தேங்காய், புளி போன்ற பொருள்களை மண்டைக்காடு வழியாகக் கிழக்குப் பகுதிகளுக்கு விற்பனைக்குக் கொண்டுசெல்வது வழக்கம்.
ஒருநாள் கொல்லத்தைச் சேர்ந்த வியாபாரி, தன் வியாபாரத்தை முடித்துவிட்டு மாட்டுவண்டியில் மண்டைக்காடு வழியாக வந்துகொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு ஆகிவிட்டது. நீண்ட தூரப் பயணத்தால் களைப்படைந்த வியாபாரி உணவு கிடைக்குமா எனத் தேடியிருக்கிறார்.

மண்டைக்காடு கோயில் அருகில் வந்தவர், அங்குள்ள ஒரு வீட்டுத் திண்ணையில் இருந்தவரிடம் எங்காவது உணவு கிடைக்குமா எனக் கேட்டிருக்கிறார். கடவுள் நம்பிக்கை இல்லாத அந்த நபர் மண்டைக்காடு கோயிலை சுட்டிக்காட்டி அங்கு சென்றால் உணவு கிடைக்கும் என விளையாட்டாகச் சொல்லியிருக்கிறார். நம்பிக்கையுடன் சென்ற அந்த வியாபாரிக்கு அம்மன் மூதாட்டி வடிவில் உணவு வழங்கியிருக்கிறார். உணவு சாப்பிட்ட வியாபாரி மூதாட்டியிடம் அனுமதிகேட்டு அங்கேயே தூங்கினார். காலையில் கண்விழித்துப் பார்த்தபோது மூதாட்டி அங்கு இல்லை. இரவு தங்கிய இடம் கோயில் எனத் தெரியவந்தது.

இதனால்தான் கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து அதிக அளவு பக்தர்கள் இன்றும் மண்டைக்காடு கோயிலுக்கு இருமுடிகட்டி வருவதைக் காண முடிகிறது. பக்தருக்கு நள்ளிரவில் உணவளித்த அம்மனுக்கு உணவு ஊட்டும் நிகழ்வாக மாசிக் கொடைவிழாவின் நிறைவுநாளில் ஒடுக்கு பூஜை நடத்தப்படுகிறது.