மார்ச் 16ல் ‘தேசிய தடுப்பூசி தினம்’ கடைபிடிப்பதன் முக்கியத்துவம் என்ன? முழு பின்னணி

கொரோனா பாதிப்பால் உலகளவில் கொத்து கொத்தாக மனிதர்கள் தங்களது உயிர்களை பலி கொடுத்த போதுதான், தடுப்பூசியின் தேவையும் அவசியமும் பெருவாரியான மக்களுக்கு புரிந்தது என்றே சொல்லலாம். அந்த புரிதலினாலேயேவும், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டிலும்கூட தடுப்பூசி பெரும்பாலானோரால் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தவகையில் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க இரண்டு டோஸ் தடுப்பூசிகளை அதிக இந்தியர்கள் போட்டுக்கொண்டனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. இப்படியாக தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு தற்காலத்தில் மக்கள் மத்தியில் நன்றாகவே மேலோங்கியிருக்கிறது.
ஆனால், கொரோனா பரவலுக்கு முன்பு நிலை எப்படி இருந்தது என்பதையும் நாம் யோசிக்க வேண்டியுள்ளது. எத்தனையோ உயிர்க்கொல்லி நோய்களால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, அவற்றால் வாழ்நாளையே தொலைத்தவர்களும் உண்டு. இதற்கு போலியோ போன்ற கொடிய நோய்களே உதாரணம்.
போலியோ, தட்டம்மை, சின்னம்மை, ருபெல்லா போன்ற பல கொடிய நோய்களில் இருந்து மக்களை காப்பாற்றுவதில், அன்றுமுதல் தடுப்பூசிகளின் பங்கு அளப்பரியதாக இருந்தது. அப்படிப்பட்ட தடுப்பூசிகளின் பயன்பாடு மற்றும் அவசியத்தை மக்களுக்கு இன்னும் எடுத்துரைக்கவேண்டும் என்பதற்காகவே, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16ம் தேதியை தேசிய தடுப்பூசி தினமாக கடைபிடிக்க வேண்டும் என 1995-ம் ஆண்டில் இந்திய அரசாங்கம் அறிவித்தது. அன்றுதொடங்கிய அந்த விழிப்புணர்வின் பலன்தான், இன்று கொரோனாவின்போது ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்த இந்தியர்கள்.
image
இந்த தேசிய தடுப்பூசி தினத்தின் முக்கியத்துவம் என்ன? அதன் பின்னணி என்ன? என்ற விவரங்களை இங்கே காணலாம்.
மார்ச் 16ம் தேதியில் தடுப்பூசி தினம் கடைபிடிப்பது ஏன்?
தேசிய தடுப்பூசி தினம் ஆண்டுதோறும் மார்ச் 16ம் தேதியே அனுசரிக்கப்படுக்கிறது. 1995ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி, இந்தியாவில் போலியோ நோயிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான முதல் வாய்வழி தடுப்பூசி செலுத்தப்பட்ட நாள். இதையொட்டியே இந்த நாளை தடுப்பூசிக்கு எதிரான மனநிலையை மாற்றுவதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவுமான தினமாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், களத்தில் இறங்கி பணியாற்றும் சுகாதார ஊழியர்களை பெருமைப்படுத்தும் விதமாகவும் இந்த தேசிய தடுப்பூசி தினம் கடைபிடிக்கப்படுக்கிறது.
வாய்வழி போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் வழக்கத்திற்கு பிறகு தடுப்பூசி மீதான அச்சமும் மக்களிடயே விலகியது எனலாம். தடுப்பூசி பயன்பாடு அதிகரித்ததால், இந்தியா சுகாதார ரீதியாக நல்ல முன்னேற்றத்தையே பெற்றது என்பதற்கு, இந்த தலைமுறை பிள்ளைகளும், அவர்களின் உடல்நலனுமே சாட்சி. தற்போது கொரோனா பரவலின் போதும் தடுப்பூசி பயன்பாடே நம்மை நோயிலிருந்து காத்துவந்தது.
இன்றும்கூட தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் நோய்கள் பல உள்ளன. உதாரணத்துக்கு எய்ட்ஸ், மலேரியா, டெங்கு போன்றவற்றை சொல்லலாம். அவற்றை கண்டுபிடிப்பதே தற்போது மருத்துவத்துறையின் அடுத்த இலக்காக, அடுத்தகட்ட வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. விரைவில் அதுவும் கிடைக்குமென நம்பலாம்!
தடுப்பூசி போடுவோம், தற்காப்புடன் இருப்போம்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.