T Rajendar Pressmeet: நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்ட டி.ராஜேந்தர், பள்ளி குழந்தைகளுடன் சமீபத்தில் பாடிய ‘வந்தே மாதரம்’ என்ற பாடல், இரண்டு உலக சாதனை புத்தகங்களில் இடம்பெற்றது. அந்த வகையில், தன்னுடன் அந்த பாடலை பாடிய பள்ளி குழந்தைகளுக்கு பாராட்டு சான்றிதழை டி.ராஜேந்தர் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சி, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.
குழந்தை வளர்ப்பு குறித்து டி.ஆர்.,
இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த டி. ராஜேந்தர்,”என் மூத்த மகனை சிறிய வயதில் இருந்து கதாநாயகன் வரையிலும் நடிக்க வைத்தேன். என் இரண்டாவது மகனையும் என்னால் முடிந்தவரை வளர்த்தேன். குழந்தைகளை சிறப்பாக வளர்க்கும் எண்ணம் என்னிடத்தில் இருப்பதால்தான் இந்த பள்ளி குழந்தைகளை வைத்து இந்த சாதனையை படைத்திருக்கிறேன்.
குழந்தைகளை தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டும், தட்டி விட்டு வளர்க்கக்கூடாது. குழந்தைகளுக்குள் இருக்கும் திறமை, அவர்களை படைத்த ஆண்டவனுக்கு மட்டும்தான் தெரியும். பொம்மை துப்பாக்கி பிடித்துக் கொண்டு விளையாடும் குழந்தை, நாளை உண்மை துப்பாக்கியை கையில் எடுத்து ராணுவத்தில் நாட்டிற்காக நிற்கும், அப்படிப்பட்ட குழந்தைகளை நாம் தட்டிக் கொடுத்து உற்சாகத்தோடு ஊக்கம் கொடுத்து வளர்க்க வேண்டும்.
சிம்பு குறித்து டி.ஆர்.,
12ஆம் வகுப்பில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது என்பது வேதனைக்குரியது. அதில் பெற்றோர்களின் கண்ணீர்தான் அங்கு இருக்கிறது. இன்று நாடு செல்லும் பாதை எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. நான் என் மகன் சிலம்பரசனை நடிக்க வைத்தாலும் கூட முதலில் படிக்க வைப்பேன், அவன் படிப்பு தவற விடக்கூடாது என்பதற்காக. நாளை மறுதினம் நேரு ஸ்டேடியத்தில் ‘பத்து தல’ திரைப்படத்தின் இசை வெளியீடு நடைபெறுகிறது என்றால் நான் என் மகனை இந்த அளவுக்கு வளர்த்துள்ளேன். நான் ராம பக்தனாக இருந்தாலும் எனக்கு ராவணனை ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் சீதையின் கற்பு கனலை அவன் தொடவில்லை.
இந்த வந்தே மாதரம் பாடலில் என்னோடு நடித்த என் பேர குழந்தை ஹைதராபாத்தில் இருப்பதாலும் அவனுக்கு தேர்வு இருப்பதாலும் என்னால் இந்த நிகழ்ச்சிக்கு அவனை அழைத்து வர முடியவில்லை. மற்ற குழந்தைகளுக்கும் தேர்வை காரணத்தால்தான் மாலை நேரத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன்” என்று பேசினார்.
தற்போதைய திமுக அரசு குறித்த கேள்விக்கு அவர்,”அரசுக்கு என்ன தெரியாது? அரசாங்கதிற்கு எல்லாம் தெரியும். அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு இருக்கும்போது மட்டும்தான் மதுக்கடை இருக்கிறதா என்றால் இல்லை, எந்த அரசு வந்தாலும் மது கடை இருக்கும். அடுத்த தலைமுறை காப்பாற்ற, மதுவை ஒழிக்க அனைத்து ஊடகங்களும் விவாதம் செய்ய வேண்டும்” என பதிலளித்தார்.
ரஜினியும்… கமலும்…
தொடர்ந்து பேசிய அவர்,”தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலை நடத்த நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள், சட்டத்தை மாற்றியிருக்கிறார்கள். புதிய சட்டத்தின் மூலமாக தேர்தல் நடக்குமா, விதிமுறைகளை பின்பற்றி பழைய தேர்தல் முறையில் நடக்குமா என்பதே தெரியவில்லை. நான் ஏன் தேர்தல் குறித்து என் பதிலை சொல்ல வேண்டும்.
நான் மீண்டும் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று ஒரு எண்ணம் வந்தால், அதற்குக் காரணம் நடிகர் கமலும் ரஜினியும் மட்டும்தான், அவர்களை என் முன்னோடியாக கருதுகிறேன். அன்று மதியை நம்பியவன், இன்று விதியை நம்புகிறேன். விதியின்படி தான் வாழ்க்கையில் அனைத்தும் நடக்கும்” என்றார்.
மேலும் படிக்க | Kavin New Movie: கவின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் டான்ஸ் மாஸ்டர்