மதுரை: டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என்றும், விரைவில் சசிகலாவை சந்திப்பேன் எனவும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக கூறினார்.
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழக அரசு நிதிநிலை அறிக்கை வரும் 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிவந்தவுடன் எனது கருத்தை சொல்கிறேன். வாய்ப்பு இருந்தால் உறுதியாக டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்.
கூடிய விரைவில் சசிகலாவை உறுதியாக சந்திப்பேன். இபிஎஸ்ஸின் நடவடிக்கை ஆரம்பத்தில் இருந்தே இன்றுவரை சட்ட நியதிக்கு புறம்பாகவே நடக்கிறது. இது அனைவருக்குமே தெரியும். நீதிமன்றத்தைவிட, மக்கள் தீர்ப்பை மட்டுமே எதிர்நோக்கி செல்கிறோம். முன்னாள் அமைச்சர்கள் மக்களை அச்சுறுத்தும் விதமாக பேட்டி தருவதாக உள்ளது. இது புத்தி இல்லாதவர்கள் என்பதை காட்டும்” இவ்வாறு அவர் கூறினார்.