பெங்களூரு: பெங்களூருவில் காரில் வைத்திருந்த ஆவணம் இல்லாத ரூ.50 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மாநில சட்டப்பேரவைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் பெங்களூரு வந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார், அரசு மற்றும் போலீஸ் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் சமீபத்தில் இருப்பதால், வாக்காளர்களை கவரும் வகையில் பரிசு, பணம் கொடுப்பதை இப்போதிலிருந்த போலீசார் கண்காணித்து தடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதையேற்று மாநிலம் முழுவதும் போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். நேற்று காலை பெங்களூரு ஊர்வசி திரையரங்கம் அருகில் நிறுத்தி வைத்திருந்த காரின் அருகில் நின்று கொண்டிருந்த மூன்று பேரை கலாசிபாளையம் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்ததால், சந்தேகமடைந்து காரை சோதனை செய்தபோது ரூ.49.70 லட்சம் இருந்ததை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பவன், கோபி மற்றும் மல்லிகார்ஜுன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார், பணம் கொண்டு வந்ததற்கான காரணம் மற்றும் பணம் எங்கிருந்து, எதற்காக கொண்டுவரப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் கொடுக்கும்படி கேட்டனர். அவர்களிடம் எந்த ஆவணமும் இல்லாமல் இருந்ததால், பணத்தை பறிமுதல் செய்ததுடன் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.