புதுடில்லி,”பிரிட்டனில் பேசிய விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன். ஆனால், பா.ஜ., – எம்.பி.,க்கள் அதற்கு அனுமதிப்பரா என்பது தெரியவில்லை,” என, செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி., ராகுல், ஐரோப்பிய நாடான பிரிட்டனுக்கு சமீபத்தில் சென்றார். அந்நாட்டு எம்.பி.,க்கள் மத்தியில் அவர் உரை நிகழ்த்தினார்.
அப்போது, இந்தியாவில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் பேச முயலும்போதெல்லாம், ‘மைக்’ அணைக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, ‘அன்னிய நாட்டில் இந்தியாவை தரக்குறைவாக பேசியதற்காக பார்லிமென்டில் ராகுல் மன்னிப்பு கோர வேண்டும்’ என, பா.ஜ., உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து திரும்பிய ராகுல், புதுடில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை நேற்று பார்லி.,யில் சந்தித்தேன். அப்போது, பா.ஜ., உறுப்பினர்கள் என் மீது குற்றம்சாட்டுகின்றனர்.
அவர்களுக்கு சபையில் வைத்து பதில் அளிக்க வேண்டியது என் கடமை; அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவித்தேன்.
இதற்கு ஓம் பிர்லா உறுதியாக எதையும் கூறாமல் புன்னகைத்தார்
என்னை பார்லிமென்டில் பேச இன்று அனுமதிப்பரா என்பது உறுதியாக தெரியவில்லை.
நாட்டில் ஜனநாயகம் செயல்படுகிறது என்றால், என் கருத்துக்களை சபையில் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். நம் ஜனநாயகம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். அதானி குழும விவகாரத்தை திசை திருப்புவதற்காகவே, என் பிரிட்டன் பேச்சை பா.ஜ., தலைவர்கள் சர்ச்சையாக்கி வருகின்றனர்.பார்லிமென்டில் விளக்கம் அளித்த பின், செய்தியாளர்களுடன் விபரமாக பேசுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்