“தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்கா; 20 லட்சம் வேலை வாய்ப்புகள்" – மத்திய அரசு!

தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

2021-22 பட்ஜெட்டில் மித்ரா திட்டம் அறிமுகம்!

கடந்த 2021-22-ம் ஆண்டு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,மித்ரா (PM Mega Integrated Textile Regions and Apparel) திட்டத்தை அறிவித்து, இந்தத் திட்டத்தின்கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஏழு மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

இதை தொடர்ந்து நேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதம மந்திரி மித்ரா திட்டத்தின் கீழ், தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும், இந்த பூங்காக்கள் ஜவுளி துறையை சார்ந்த விவசாயம், நூலிழை, தொழிற்சாலை, பேஷன், வெளிநாட்டு வர்த்தகம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் என்றும் ட்வீட் செய்துள்ளார்.

மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளது Make in India’-விற்கும், ‘Make For the World’-ற்கும் சிறந்த உதாரணமாகத் திகழும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மெகா ஜவுளிப் பூங்காகளுக்கான மொத்த நிதியாக ரூ.4,445 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பூங்காகள் 2026-27-ம் ஆண்டிற்குள் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்காக ரூ.200 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“ரூ.70,000 கோடி முதலீடுகள், 20 லட்ச வேலைவாய்ப்புகள் எதிர்பார்ப்பு!”-பியூஷ் கோயல்

இது குறித்து நிருபர்களிடம் பேசிய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “இந்த மெகா ஜவுளி பூங்காக்கள் மூலம் ரூ.70,000 கோடி முதலீடுகளும், சுமார் 20 லட்சம் வேலைவாய்ப்புகளும் ஏற்படும் வாய்ப்புள்ளது.

இந்தியாவில் ஜவுளித் தொழிற்சாலைகள் ஒழுங்குப்படுத்தப் படாததால் வீண் விரயங்கள் மற்றும் லாஜிஸ்டிக் செலவுகள் அதிகம் ஆகின்றன. இந்தப் பூங்காக்கள் மூலம் இதை பெரிதளவில் குறைக்கலாம். மேலும், இந்தப் பூங்காக்களில் அமையவுள்ள அதிநவீன தொழில்நுட்பங்கள் அதிகளவில் வெளிநாட்டு முதலீடுகளையும், உள்நாட்டு முதலீடுகளையும் ஈர்க்கும்” என்று கூறினார்.

தமிழகத்தில் அமைய உள்ள ஜவுளிப்பூங்கா ஈரோட்டில் அமையுமா அல்லது திருப்பூரில் அமையுமா என்கிற கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள தமிழக மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.