சிம்பு நடிப்பில் `சில்லுனு ஒரு காதல்’ புகழ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள `பத்து தல’ திரைப்படம் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.
‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘வெந்து தணிந்தது காடு’ என சிம்புவின் படத்திற்குத் தொடர்ந்து இசையமைத்துப் பல ஹிட் பாடல்களைக் கொடுத்து வருகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த வரிசையில் இப்படத்திற்கும் ரஹ்மானே இசையமைத்திருக்கிறார். இதையடுத்து நீண்ட நாள்களாக ரசிகர்கள் எதிர்பார்த்த இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகிப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்திருந்தன. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், விழா மேடையில் பேசுகையில், “‘பத்து தல’ படத்தை ஒத்துக்கக் காரணம் சிம்பு தம்பிதான். அதற்கு அடுத்தபடியாக இயக்குநர் கிருஷ்ணா. ‘சில்லுனு ஒரு காதல்’ படத்துல ஒர்க் பண்ணப்ப, ‘முன்பே வா’ பாட்டு கண்டிப்பா ஒர்க் ஆகும்ன்னு அவர்தான் சொன்னாரு. அதே மாதிரி அந்தப் பாட்டு இப்போ வரைக்கும் கொடி கட்டிப் பறக்குது” என்றார் நெகிழ்ச்சியுடன்.
‘பத்து தல’ ஆல்பம் பற்றி ஒரே வார்த்தையில் பதிலளிக்கக் கேட்டதற்கு, “மாஸ்” என்று கூறி அப்ளாஸ் அள்ளினார்.
அடுத்தபடியாக, இந்தப் படத்தில் ஏன் சிம்புவைப் பாட வைக்கவில்லை என்ற கேள்விக்கு, “அந்தச் சமயம் அவர் தாய்லாந்து போயிட்டாரு. இல்லைன்னா, ‘நம்ம சத்தம்’ பாடலை அவர்தான் பாடியிருப்பாரு” என்றார்.
தொடர்ந்து, ஏ.ஆர்.ரஹ்மான் சினிமா லைட்மேன்களுக்கு நிதி திரட்டுவதற்காக நடத்தும் சூஃபி (Sufi) இசை நிகழ்ச்சி தொடர்பான இணையதளம் ஒன்றை சிம்பு அறிமுகம் செய்தார்.
அதன் பின்னர், விழாவின் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானும் படத்தின் நாயகன் சிம்புவும் ரசிகர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இயக்குநர் டி.ராஜேந்தர், சிம்பு, மற்றும் இயக்குநர் கிருஷ்ணா ஆகியோர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இசைக்கருவி ஒன்றின் மாடலை அன்பளிப்பாக அளித்தனர்.