உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை பயங்கர தீ விபத்து : சுமார் 500 கடைகள் தீயில் எரிந்து சேதம்!!

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கான்பூரின் பாஸ்மண்டி பகுதியில் உள்ள ஹம்ராஜ் மார்க்கெட்டில் அதிகாலை 3 மணி அளவில் தீ பிடித்து எரிய தொடங்கியது. அந்த நேரத்தில் காற்று பலமாக வீசிக் கொண்டு இருந்ததால் அடுத்தடுத்த கட்டிடங்களுக்கு தீப் பரவியது. இதனால் அருகில் இருந்த மசூத் டவரின் 2 கட்டிடங்கள் உள்ளிட்ட வணிக வளாகங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன.

இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மளமளவென பரவிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீப் பரவும் வேகம் அதிகமாக இருந்ததால் கூடுதல் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.16 தீயணைப்பு வாகனங்கள் மூலம் சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஓரளவுக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் தீ முழுமையாக அணைக்கப் படாததால் அப்பகுதியில் உள்ள 500த்திற்கும் மேற்பட்ட சிறிய கடைகள் தீ விபத்து அபாயத்தில் உள்ளதாக கான்பூர் காவல் இணை ஆணையர் ஆனந்த் பிரகாஷ் திவாரி கூறியுள்ளார். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.