சண்டிகர்காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங் ஆலோசகர் பப்பல்ப்ரீத் சிங், ஹோஷியார்புர் மாவட்டத்தில், சீக்கிய கோவில் ஒன்றில் சாதாரணமாக உலாவிய, கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள்ளன.
பஞ்சாபில், ‘வாரிஸ் பஞ்சாப் தே’ என்ற அமைப்பின் வாயிலாக, மத தீவிரவாத பிரசாரத்தில் அம்ரித்பால் சிங் ஈடுபட்டு வந்தார். மேலும், பஞ்சாபை தனி நாடாக அறிவிக்கும் காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட தன் ஆதரவாளரை மீட்க, காவல் நிலையத்துக்குள் நுழைந்து அம்ரித்பால் சிங் வன்முறையில் ஈடுபட்டார். இதையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் முயற்சித்த போது, அவர் கடந்த 18ல் தப்பி ஓடினார். அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஹோஷியார்புர் மாவட்டத்தின், தனுலி என்ற கிராமத்தில் உள்ள சீக்கிய கோவில் ஒன்றுக்கு, அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளியும், ஆலோசகருமான பப்பல்ப்ரீத் சிங் சென்று வந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள், சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகின.
இந்த வீடியோ, கடந்த 29ல் எடுக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில், தீவிர தேடுதல் வேட்டை நடந்த மர்னையன் கிராமத்திற்கு, வெறும், 2 – 3 கி.மீ., துாரத்தில் தான், தனுலி கிராமம் உள்ளது.
போலீசார் துரத்துவதை அறிந்த அம்ரித்பால் சிங், பப்பல்ப்ரீத் சிங் ஆகியோர், ஹோஷியார்புர் வந்ததும், தனித்தனியாக பிரிந்து தலைமறைவாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, தனுலி கிராமத்தில் உள்ள சீக்கிய கோவில்கள் மற்றும் சந்தேகிக்கப்படும் இடங்களில், போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அம்ரித்பால் சிங்கை பிடிக்கும் பணியில்,’ ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.