சென்னை :நடிகை குஷ்பூ தொடர்ந்து தென்னிந்திய அளவில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் சிறப்பான பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
தமிழில் கமல், ரஜினி, சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் குஷ்பூ. பப்ளியான குஷ்பூவிற்கு கோயில் கட்டி அழகு பார்த்தவர்கள் தமிழ் ரசிகர்கள்.
திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தாயாக மாறியுள்ள குஷ்பூவிற்கு தற்போதும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். தயாரிப்பாளர், சின்னத்திரை மற்றும் பெரியத்திரை நடிகை என பன்முகம் காட்டி வருகிறார் குஷ்பூ.
நடிகை குஷ்பூ சுந்தர்
நடிகை குஷ்பூ தன்னுடைய 8வது வயதிலேயே படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். இவரது அறிமுகம் பாலிவுட்டில்தான் அமைந்தது. தொடர்ந்து சிறுமியாகவே 25 படங்களுக்கும் மேல் நடித்த குஷ்பூ, ஒருகட்டத்தில் நாயகியாகவும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பாலிவுட்டில் நடித்துள்ளார். ஆனால் அவரது அப்பாவின் பேராசையால் சரியான படங்களை தேர்வு செய்ய முடியாமல் போனதால், தனக்கு பாலிவுட்டில் சிறப்பான கேரியர் அமையவில்லை என்று தனது சமீபத்திய பேட்டியில் குஷ்பூ தெரிவித்திருந்தார்.

சுந்தர் சி -குஷ்பூ ஜோடி
தொடர்ந்து தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்கத் துவங்கிய குஷ்பூ, தெலுங்கில் முதலில் என்ட்ரி கொடுத்திருந்தார். தமிழில் பிரபுவுடன் இணைந்து தர்மத்தின் தலைவன் படத்தில் அறிமுகமான குஷ்பூவின், துருதுரு நடிப்பு அவருக்கு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. ரஜினி, கமல், கார்த்திக், சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த குஷ்பூ, இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டு, தமிழ்நாட்டில் மருமகளானார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

அரண்மனை 4 படம்
இவர்கள் இருவரும் தற்போது வளர்ந்து பெரியவர்களாகியுள்ள நிலையில், ஒருவர் நடிப்பிலும் மற்றொருவர் தயாரிப்பிலும் ஈடுபட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. குஷ்பூ மற்றும் சுந்தர் சி இணைந்து அவ்னி கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி பல படங்களை தயாரித்துள்ளனர். அரண்மனை படங்களின் அடுத்தடுத்த பாகங்களை தயாரித்துள்ள இந்த நிறுவனம், அடுத்ததாக சுந்தர் சி லீட் கேரக்டரில் நடிக்கவுள்ள அரண்மனை 4 படத்தை தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

சுந்தரோடு நடிக்க மாட்டேன்
மிகவும் கலகலப்பானவராக இருக்கும் குஷ்பூ, தன்னுடைய மனதில் பட்ட கருத்துக்களை எப்போதுமே வெளிப்படையாக பேசக்கூடியவர். இந்த குணம் இவருக்கு பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்வாகவும் அமைந்துள்ளது. இதனிடையே தன்னுடய சமீபத்திய பேட்டியில் ஹீரோவாக சுந்தர் சி நடித்துவரும் நிலையில் அவருக்கு ஜோடியாக ஏன் நடிக்கவில்லை என்ற காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். வீட்டிலேயும் அதே மூஞ்சி சூட்டிங் ஸ்பாட்டிலும் அதே மூஞ்சி என்றால் மிகவும் போரடித்துவிடும் என்று கூறியுள்ளார்.

சுகாசிஹினியை பார்த்து பயந்த குஷ்பூ
தொடர்ந்து பேசிய குஷ்பூ தனக்கும் கமல்ஹாசனுக்கும் சிறப்பான வகையில் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் அமையும் என்றும் ரம்பம்பம் பாடல் அதற்கு சிறப்பான எடுத்துக்காட்டு என்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதேபோல நடிகர் கார்த்திக்கின் நடிப்பை பாராட்டிய குஷ்பூ, மிஸ்டர் சந்திரமௌலி என்ற ஒரு டயலாக் மூலமே அவர் எப்படி ரசிகர்களை கொள்ளைக் கொண்டார் என்பதையும் சுட்டிக் காட்டினார். இதேபோல தர்மத்தின் தலைவன் படத்தில் நடிகை சுகாசிஹினியை பார்த்து தான் பயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.