"அதிமுகவில் இருந்து விலகியது நெருடல்தான்".. சட்டென சொன்ன நயினார் நாகேந்திரன்.. ரூட் கிளியரா?

சென்னை: அதிமுகவில் இருந்து விலகியது தனக்கு நெருடலாக இருப்பதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நகமும் சதையுமாக இணைந்திருந்த பாஜக – அதிமுக கூட்டணியில் கடந்த சில மாதங்களாக பெரும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. அதன் உச்சக்கட்டமாக, பாஜகவின் ஐடி விங் நிர்மல் குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகளை அதிமுகவில் சேர்த்துக் கொண்டதை பாஜக விரும்பவில்லை.

தன்னை தனிப்பட்ட முறையில் கடுமையாக வசைப்பாடிய பல நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி கட்சியில் சேர்த்தது அண்ணாமலைக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை மையமாக வைத்து இரு கட்சி தலைவர்களுக்கு இடையே கடும் வார்த்தை மோதலும் ஏற்பட்டு வந்தது.

மாஸ் காட்டிய நயினார்

இந்த சூழலில், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் ராஜினாமா செய்துவிடுவதாக அதிரடியாக கூறினார் பாஜக தலைவர் அண்ணாமலை. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என துணிச்சலாக கூறிய முதல் நபர் நயினார் நாகேந்திரன் தான். மேலும், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகாது எனவும் அவர் தெரிவித்தார். ஒரே கட்சியில் இருந்துகொண்டு மாநிலத் தலைவரின் கருத்தை வெளிப்படையாக எதிர்த்ததால் நயினார் நாகேந்திரன் கட்சி மாறக்கூடும் என பேச்சுகள் அடிபட்டு வந்தன. மேலும், தெற்கே ஓபிஎஸ்-ஸுக்கு பதிலாக முக்குலத்தோர் வாக்குகளை ஒருங்கிணைக்க நயினார் நாகேந்திரனை பயன்படுத்த அதிமுக தலைமை வியூகம் அமைப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

“நெருடலாக இருக்கிறது”

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நயினார் நாகேந்திரன் இன்று பேட்டியளித்தார். அவரது பேச்சின் சில முக்கிய அம்சங்கள் வருமாறு: பாஜகவில் பயணிப்பதில் எனக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை. நெருடலும் இல்லை. அதே சமயத்தில், அதிமுகவில் இருந்து விலகியது நெருடல் தருகிறதா என்றால், நிச்சயமாக நெருடலாகதான் இருக்கிறது என்றுதான் சொல்ல முடியும். அது வருத்தமும் தருகிறது.

“எடப்பாடி என்னை அழைத்தார்”

ஜெயக்குமார் என்னை மீண்டும் அதிமுகவுக்கு அழைத்தார். அதேபோல, எடப்பாடி பழனிசாமியும் என்னை கட்சிக்குள் அழைத்தார். உண்மையை சொல்ல வேண்டுமானால், எடப்பாடி பழனிசாமி எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். பன்னீர்செல்வமா, பழனிசாமியா என்று கேட்டால், நான் எடப்பாடி பழனிசாமியை தான் கூறுவேன். அந்த அளவுக்கு எனக்கு நெருக்கமானவர் பழனிசாமி. நான் அமைச்சராக இருக்கும் போது, அவர் அமைச்சர் ஆகவில்லை. அப்போது எனக்கு கீழ் செயல்பட்ட துறையில் அவர் தலைவராக இருந்தார். அப்போது முதலாகவே, எங்களுக்குள் நெருக்கம் இருந்தது.

கட்சி மாற்றம்..

எடப்பாடி பழனிசாமி எனக்கு நெருக்கமானவர் என்பதால் அதிமுகவில் இணைய மாட்டேன். அவர் என்னை அழைத்தது உண்மைதான். ஆனால், நான் சேர மாட்டேன் என தெளிவாக சொல்லிவிட்டேன். திமுகவில் சேர வாய்ப்பே இல்லை. அப்பாவு அழைத்தாலும் திமுகவில் சேர மாட்டேன். அரசியல் கடந்தும் சிலருடன் நட்பு பாராட்டுவதால் நான் கட்சி மாறப்போகிறேன் என சிலர் கூறுகிறார்கள். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.