காஞ்சிபுரம்: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மட்டும் ஏன் அதிகரித்து கொண்டே செல்கிறது? என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சூழ்ந்து கிராம பெண்கள் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நிர்மலா சீதாரமன் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கான காரணம் குறித்து அவர்களிடம் விளக்கவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருப்பவர் நிர்மலா சீதாராமன். இவர் ஒருநாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் கிராமத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
அதன்பிறகு அவர் நிர்வாகிகளுடன் தெருவில் நடந்து சென்று மக்களிடம் கலந்துரையாடினார். அப்போது மத்திய அரசின் திட்டங்கள் சரியாக கிடைக்கிறதா? ரேஷனில் தரமான அரிசி வழங்கப்படுகிறதா? என பல கேள்விகளை கேட்டார். அதற்கு பொதுமக்கள் பதிலளித்தனர்.
சூழ்ந்து கேள்வி கேட்ட பெண்கள்
இந்த வேளையில் பெண்கள் சிலர் நிர்மலா சீதாராமனை சூழ்ந்து கொண்டு ‛‛சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மட்டும் உயர்ந்து கொண்டே செல்கிறதே. அது ஏன்?” என கேள்வி எழுப்பினார்கள். இந்த கேள்வியை நிர்மலா சீதாராமன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அவர் மக்களிடம் பதில் அளித்து சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வு ஏன்? என்பதற்கு விளக்கம் அளித்தார்.

நிர்மலா சீதாராமன் விளக்கம்
இதுபற்றி நிர்மலா சீதாராமன், ‛‛நம் நாட்டில் காஸ் சிலிண்டரில் நிரப்பக்கூடிய எரிவாயுவை உற்பத்தி செய்யும் ஆலைகள் இல்லை. இதனால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம். அரசு தனது கையில் இருந்து ரூ.600 செலவழித்து உங்களுக்கு 600 ரூபாய்க்கு சிலிண்டர் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறியது. இப்போது அந்த அளவிற்கு விலையை குறைக்க வேண்டுமானால் அரசிடமும் பணம் இருக்க வேண்டும்.

போதிய நிதியில்லை
ஆனால் போதிய அளவில் நிதி இல்லை.அதோடு பிற பல திட்டங்களுக்கும் நிதியை செலவிட வேண்டி உள்ளது. இதனால் சிலிண்டருக்கு கூடுதல் மானியம் வழங்க முடியவில்லை. இதனால் வெளிநாடுகளில் விலையேறும்போது நமக்கும் இங்கு விலை உயர்கிறது. அங்கு விலை குறைந்தால் இங்கும் குறையும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் விலை குறையவில்லை” எனக்கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.

சுவர் விளம்பரம் துவக்கம்
இதையடுத்து 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக நிர்வாகியின் வீட்டு சுவற்றில் வரையப்பட்ட பாஜகவின் தாமரை சின்னத்துக்கு நிர்மலா சீதாராமன் வர்ணம் பூசி சுவர் விளம்பரத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்பட பல நிர்வாகிகள் உடனிருந்தனர்.