`கூட்டணி குறித்து எதுவும் கூற இயலாது. கூட்டணி குறித்த இறுதி முடிவை பா.ஜ.க தேசியத் தலைமைதான் எடுக்கும்’ என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “அ.தி.மு.க கூட்டணி இறுதியாகிவிட்டதாகக் கூறமுடியாது. கூட்டணியில் இருக்கிறோம் என்றுதான் அமித் ஷா கூறினாரே தவிர, எதிர் வரும் தேர்தலில் கூட்டணி குறித்து உறுதிசெய்யவில்லை. இதை நீங்கள் புரிந்துகொள்ள இந்தி படித்திருக்க வேண்டும்.

தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்கள் உள்ள நிலையில், கூட்டணி குறித்து எதுவும் இப்போது கூற முடியாது. மேலும், கூட்டணி குறித்த இறுதி முடிவை பா.ஜ.க தேசியத் தலைமைதான் எடுக்கும். அரசியலில் கல்லில் எழுதப்பட்ட வார்த்தைகள் என எதுவும் கிடையாது. தண்ணீரில் எழுதப்பட்டவைதான் அதிகம். பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க இல்லை என நான் எப்போதும் கூறியதில்லை. குறைந்தது 25 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெறும் அளவுக்கு நாங்கள் தயாராக வேண்டும்.
20 ஆண்டுகளில் பா.ஜ.க-வின் வளர்ச்சி பற்றிச் சிந்தித்தால், இப்போது செல்லும் பாதை சரியானதாக இல்லை. பா.ஜ.க-வை வழிநடத்திச் செல்வது தலைவராக என்னுடைய கடமை. கூட்டணியை முடிவுசெய்வது அமித் ஷா, நட்டா போன்ற தலைவர்கள்தான். 2024, 2026, 2030 தேர்தல்களில் பா.ஜ.க எப்படி இருக்க வேண்டும் என்ற என்னுடைய கருத்துகளை, அமித் ஷா உடனான சந்திப்பின்போது தெரிவித்திருக்கிறேன்.

பா.ஜ.க தனித்துப் போட்டியென பொதுவெளியில் நான் எங்கும் கூறவில்லை. கட்சி வளர்ச்சிக்கென எனக்குத் தனி இலக்கு இருக்கிறது. அது கூட்டணியுடனா அல்லது தனித்தா என்பதைத் தேசியத் தலைமை முடிவுசெய்யும். 2024-ம் ஆண்டு தேர்தலில் நான் நின்றால் க்ளீன் பாலிடிக்ஸ் செய்வதைப் பார்ப்பீர்கள். கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்ற இலக்கில் பயணிக்கத் தொடங்கிவிட்டேன். பா.ஜ.க-வின் மாற்றத்துக்கான எழுச்சியை தென்காசி மாநாட்டிலிருந்து பார்க்கத் தொடங்கிவிட்டோம்.
இங்கே மாநிலத் தலைவராக என்னுடைய கருத்தைத் தெரிவித்திருக்கிறேன். இன்னும் தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கின்றன. எனவே பொறுத்திருங்கள். ஏப்ரல் 14-ம் தேதி ஊழல் பட்டியல், வாட்ச் பில் அனைத்தும் கொடுக்கப்படும். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், எஸ்.பி.வேலுமணியை விமான நிலையத்தில், மரியாதை நிமித்தமாகச் சந்தித்தோம். அரசியல்ரீதியாக எதுவும் கிடையாது. வானதி சீனிவாசன் உட்பட அனைவரும் இந்தக் கட்சியை வளர்க்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு ஸ்டைல் மற்றும் பண்பு இருக்கும். பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்தி மக்கள் பிரதிநிதியாக வலம் வருவதில் எந்தப் பயனும் இல்லை” என்று தெரிவித்தார்