ராணிப்பேட்டை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் முதலீடுகள் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் மிக முக்கியமான முதலீடு ஒன்று செய்யப்பட உள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்த வருடம் சென்னைக்கு மட்டுமின்றி வேறு பல மாவட்டங்களுக்கும் முக்கியமான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. முக்கியமாக பல மாவட்டங்களில் முதலீடுகள் செய்யப்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின.
அதன்படி தமிழ்நாட்டில் இந்த வருடம் ரூ100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை
முன்பெல்லாம் சென்னைக்கு மட்டும் கொடுக்கப்பட்டு வந்த முதலீடு கவனம் தற்போது மற்ற இரண்டாம், மூன்றாம் கட்ட மாவட்டங்களுக்கும், நகரங்களுக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக தமிழ்நாட்டில் மின்சார பேட்டரி வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதற்காக ஓசூரில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுக்கும், ஓலா நிறுவனத்திற்கும் இடையே 7614 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழ்நாடு நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஓசூர்
மேலும் 20 மெகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைக்கவும் ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த சிப்களை உற்பத்தி செய்யும் உலகிலேயே பெரிய ஆலையாக இது இருக்க போகிறது என்று ஓலா நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த ஆலைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பூங்காவில் அமைக்கப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3,111 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இந்த ஒப்பந்தத்தை பெற ஹைதராபாத், பெங்களூர் போன்ற நகரங்கள் முயன்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது. அங்கே ஓலா பைக் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர மின்சார வாகன உற்பத்தி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 500 ஏக்கர் பரப்பளவில் இந்த இருசக்கர உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

ராணிப்பேட்டை
ஓசூர் போலவே கோவை, மதுரை உள்ளிட்ட மற்ற பல மாவட்டங்களும் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் முதலீடுகள் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்திலும் மிக முக்கியமான முதலீடு ஒன்று செய்யப்பட உள்ளது. அதன்படி ராணிபேட்டையில் உற்பத்தி செய்யப்படும் காலணிகள் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. உலக அளவில் இதனால் ராணிப்பேட்டை கவனிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல காலனி நிறுவனமான ஹோங் பூ எனப்படும் நிறுவனம் ராணிப்பேட்டையில் முதலீடு செய்ய உள்ளது.

முதலீடு
தைவானை சேர்ந்த இந்த நிறுவனம் ராணிப்பேட்டையில் முதலீடு செய்து, அதன்பின் உலகம் முழுக்க ஏற்றுமதி செய்ய உள்ளது. இதற்காக ராணிப்பேட்டையில் 130 ஏக்கர் நிலத்தை அரசிடம் இருந்து அந்த நிறுவனம் வாங்கி உள்ளது. இந்த நிறுவனம் மூலம் ராணிப்பேட்டையில் உள்ள 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். நாம் பயன்படுத்தும் பிரபல காலணிகளான நைக்கி, ரீபோக் போன்ற நிறுவனங்கள் எல்லாம் இந்த ஹோங் பூ நிறுவனம் வழியாகவே காலணிகளை தயாரிக்கின்றன. அந்த நிறுவனம்தான் தற்போது ராணிப்பேட்டையில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

டாப்
கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் இருந்து வெளியேறிய பின்பும் கூட சென்னையில் முதலீடுகள் சுணங்காமல் அதிகரித்துள்ளன. இந்தியாவில் கொரோனா காரணமாக லாக் டவுன் இருந்த 2021 இறுதி கட்டங்களிலும் கூட தமிழ்நாடு வளர்ச்சியை பதிவு செய்தது. இந்த காலகட்டத்தில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே இந்திய மாநிலம் தமிழ்நாடு மட்டுமே ஆகும். இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 9.47 சதவிகிதத்தை தமிழ்நாடு பங்களிக்கிறது. 2021-22 நிதியாண்டில் தமிழ்நாடுதான் இந்தியாவில் நம்பர் 2 மாநிலம். தமிழ்நாட்டில் மாநில ஜிடிபி ₹19.02 லட்சம் கோடியில் இருந்து ₹21.79 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளத குறிப்பிடத்தக்கது.