ஏஐ தொழில்நுட்பத்தால் சமூகத்துக்கு ஆபத்து நேரிடலாம்: அமெரிக்க அதிபர் பைடன் கவலை

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமூகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நிகழ்வு ஒன்றில் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களிடம் ஜோ பைடன் பேசும்போது, “தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை சந்தைக்கு கொண்டு வருவதற்கு முன்னர் அதன் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்வது அவசியம். நோய் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற சவால்களைச் சமாளிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவக் கூடும். அதேநேரத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் சமூகத்துக்கு ஆபத்தானவையாக இருக்கலாம்.

தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்கள் நமது சமூகத்துக்கும், பொருளாதாரத்துக்கும், தேசப் பாதுகாப்பிற்கும் ஏற்படும் அபாயங்களையும் தீர்க்க வேண்டும். சமூக வலைதளத்தை பயன்படுத்தும் இளைஞர்கள் மனதளவில் பாதிக்கப்படும்போது இந்தப் புதிய தொழில்நுட்பங்களினால் ஏற்படும் தீங்குகளை நாம் தெரிந்துகொள்ள முடிகிறது” என்றார்.

செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருளை மனித மனதைப் போலவே புத்திசாலித்தனமாக சிந்திக்க வைக்கும் தொழில்நுட்ப முறையாகும். தற்போதே மருத்துவத் துறையில் பல சாதனைகளையும் செவ்வனே ஆற்றி வருகிறது செயற்கை நுண்ணறிவு.

முன்னதாக, செயற்கை நுண்ணறிவில் அசாத்திய ஆற்றல் கொண்டதாக கூறப்பட்ட சாட் ஜிபிடிக்கு இத்தாலியில் தடை விதிக்கப்பட்டது. பயனர்களிடமிருந்து அவர்களது தனிப்பட்ட தரவுகளை முறையற்ற முறையில் சேகரித்த காரணத்திற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டதாக இத்தாலி அரசு விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.