சென்னை: உறுப்பினர் சேர்க்கையை முழுமையாக முடிக்கும் வகையிலும், தேவையற்ற விவாதங்கள், சர்ச்சைகளை தவிர்க்கும் வகையிலும் ஏப்.7-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றுள்ள நிலையில், அடுத்தகட்ட நிகழ்வுகள், ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்துள்ள வழக்கு ஆகியவை குறித்தும், கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்த, பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, பொதுக்குழு கூட்டம் வரும் ஏப்.7-ம் தேதி பகல்12 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் என நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் செயற்குழு உறுப்பினர்களான தலைமைக்கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மகளிர் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டி ருந்தது.
முன்னதாக, ஏப்.7-ம் தேதிஅதிமுக தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்த நிலையில், அதை ரத்து செய்து செயற்குழு கூட்டத்தை நடத்துவது என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட இந்த செயற்குழு கூட்டம், ரத்து செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு சில காரணங்களால் ரத்துசெய்யப்படுகிறது என்று அதிமுகதலைமை அலுவலகம் தெரிவித் துள்ளது.
இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘உறுப்பினர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு நாளை (இன்று) முதல்சேர்க்கைக்கான படிவம் விநியோகிக்கப்பட உள்ளது. இப்பணிகளை முடிக்காமல் செயற்குழுவை நடத்துவது முறையாக இருக்காது. ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், அந்த வழக்கு முடிவுக்குப்பின் செயற்குழுவை கூட்டுவதுதான் சரி.
அதேபோல, ஏற்கெனவே பாஜக தலைவர், பழனிசாமி குறித்துவிமர்சித்து வரும் நிலையில், அவருக்கு எதிரான கருத்துகள் கூட்டத்தில் எழும்பும். இது தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தும். இதுதவிர செயற்குழு கூட்டத்துக்கான அறிவிப்பும், நடத்தும் நாளுக்கும் இடையில் போதிய இடைவெளி இருக்க வேண்டும் என்பதும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.
தண்ணீர் பந்தல்: இதற்கிடையே அதிமுக நிர்வாகிகள் தண்ணீர் பந்தல்களை அமைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தாங்கள்வசிக்கும் பகுதிகளில், குடிநீர் மற்றும் நீர் மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகத்தைத் தணிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
குடிநீர்ப் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை சுகாதாரமான முறையில் செயல்படுவதற்கு ஏற்ற திட்டத்தோடு இந்தப் பணியை நடைமுறைப்படுத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.