முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்: என்னென்ன விவாதிக்கப்படும்?

முதலமைச்சர்

தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் மே 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் தொடங்கி நேற்று நிறைவடைந்தது. சட்டப் பேரவையை சபாநாயகர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை சார்பாகவும் முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் பல்வேறு திட்டங்கள் மக்களிடம் வரவேற்பு பெற்றன. உதராணமாக செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கான மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இது போன்று அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் அவை செயல்படுத்தப்படும் விதம் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பல்வேறு விஷயங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. 2024ஆம் ஆண்டு ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைக்கும் விதமாக தமிழக அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பன்னாட்டு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். அதற்கான ஒப்புதலும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டமன்றத்தில் நேற்று கொண்டுவரப்பட்ட தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டமுன்வடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகளுடன் திங்கள் கிழமை ஆலோசனை நடைபெறுகிறது என்றாலும், அமைச்சரவைக் கூட்டத்திலும் இது தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.