புதுடில்லி: காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள பிம்பர் கலியில் இருந்து சங்கியாட் பகுதிக்கு, கடந்த, 20ம் தேதி, வீரர்களுடன் ராணுவ வாகனம் சென்றது. அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதில், பயணித்த ராணுவ வீரர்கள் ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
சம்பவ இடத்தில், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு படை மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், சம்பவ இடத்தை பார்வையிட்டு தாக்குதல் குறித்த, தெளிவான படங்களை பெற்றுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 5 பயங்கரவாதிகள் ஈடுபட்டதாகவும், அதில் 3 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் எனவும், 2 பேர் உள்ளூரை சேர்ந்தவர்கள் எனவும், முதற்கட்ட தகவல்கள் கிடைத்துள்ளன.
ராணுவ அதிகாரிகள் கூறியதாவது:
தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், ராணுவ ஆயுதங்களுடன், ஸ்டீல் கோர் தோட்டாக்களை பயன்படுத்தி களமிறங்கி உள்ளனர். தாக்குதலின்போது மற்ற பயங்கரவாதிகள் தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகளை வீசுவதற்கு முன்பு, பயங்கரவாதி ஒருவர், வாகனத்தின் முன்பக்கத்தை குறிவைத்திருக்கலாம் என, நம்பப்படுகிறது. இதனால், ராணுவ வீரர்களுக்கு பதிலடி கொடுக்க நேரமில்லாமல் போயிருக்கலாம்.
தீவிரவாதிகள் தப்பிச்செல்லும் முன், ராணுவ வீரர்களின் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை திருடிச் சென்றுள்ளனர். சம்பவம் நடந்த, பாடா துரியன் அடர்ந்த காட்டு பகுதி, நீண்ட காலமாக பயங்கரவாத தாக்குதல் நடக்காத பகுதியாக இருந்தாலும், அந்த நிலப்பரப்பு, அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால், அதன் அருகே உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டை கடந்து, பயங்கரவாதிகள் ஊடுருவும், பாதையாகவும் உள்ளது.
![]() |
தாக்குதல் தொடர்பாக, 12 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை, யாரும் கைது செய்யப்படவில்லை. பயங்கரவாதிகள் காட்டுப் பகுதியில், மறைவிடங்களில் பதுங்கி இருக்கலாம் அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்கு சென்றிருக்கலாம் எனவும், தெரியவருகிறது.
தாக்குதலுக்கு, ஜெய்ஷ்-இ-முகமதுவின் மற்றொரு பிரிவான, மக்கள் எதிர்ப்பு பாசிச முன்னணி என்ற, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களுக்கு, ரஜோரி மற்றும் பூஞ்ச் இடங்களின், நிலப்பரப்பு பற்றி தெரிந்துள்ளது. இப்பகுதி, சமீபத்தில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட, கே.ஜி.எப்., எனப்படும், ஜம்மு-காஷ்மீர் கஜ்னாவி படையின் மையாக உள்ளது. இங்கு, மட்டும் மூன்று முதல் நான்கு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்