சென்னை: இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் படங்களை இயக்கி வருகிறார்.
இதில் இந்தியன் 2 படப்பிடிப்பு தைபே, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்று வந்தது.
ஷங்கர் தனது படங்களில் பாடல் காட்சிகளை வெளிநாடுகளில் படம்பிடிப்பது வழக்கம்.
இந்நிலையில், தற்போது அதுகுறித்து இயக்குநர் ஷங்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் ஓபன்:ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். அர்ஜுன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில் நடிப்பில் 1993ம் ஆண்டு வெளியான இந்தப் படம், சூப்பர் ஹிட் அடித்தது. முதல் படத்திலேயே முன்னணி இயக்குநராக வலம் வரத் தொடங்கிய ஷங்கர், அடுத்தடுத்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.O படங்களை இயக்கியுள்ளார்.
பிரம்மாண்ட இயக்குநர் என பெயரெடுத்த ஷங்கருக்கு, வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது ரொம்பவே பிடித்த விசயம் என சொல்லப்படுகிறது. முக்கியமாக ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்’ என்ற பாடலை, ஏழு உலக அதிசயங்கள் முன்னால் படமாக்கியிருப்பார். அதனால், இந்தப் பாடல் மிகப் பெரிய ஹிட் ஆனது. அதேபோல், ஜீன்ஸ் படத்தின் பாடல்கள் அனைத்துமே வெளிநாடுகளில் தான் படமாக்கப்பட்டிருந்தன.
இந்தியன், பாய்ஸ், சிவாஜி, எந்திரன், ஐ போன்ற படங்களின் பாடல் காட்சிகளும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டன. இது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், இயக்குநர் ஷங்கர் தயாரிப்பாளரின் செலவிலேயே வெளிநாடுகளை சுற்றிப் பார்க்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் வெளிப்படையாகவே விளக்கம் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்த ஷங்கர் இதுபற்றி பேசியுள்ளார். அதில், வெளிநாடுகளில் பாடல் காட்சி படமாக்குவது தயாரிப்பாளர் பணத்தில் எப்படியாவது வெளிநாட்டை சுற்றிப் பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யவில்லை. இந்தியன் படத்தில் மனிஷா கொய்ராலா ப்ளூக்ளிராஸ் மெம்பர், அதனால் டெலிபோன் மணிபோல் பாடலை வெறும் மிருகங்களை மட்டுமே வைத்து காட்சிப்படுத்தும் விதமாக தான் ஸ்கிரிப்ட் எழுதியிருந்தேன்.

ஆனால், அந்தப் பாடலை ஏ.ஆர்,ரஹ்மான் அதிகமான பீட்ஸுடன் கம்போஸ் செய்துவிட்டார். அந்த இசைக்கு வெறும் பிராணிகளை மட்டும் காட்சிப்படுத்தினால் போதாது, டான்ஸ் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனால் இந்த இரண்டையும் மிக்ஸ் பண்ணி எடுத்தோம். கதைக்கு தேவை என்றால் மட்டுமே வெளிநாடுகளில் சென்று ஷூட்டிங் செய்வேன். அதேநேரம் முதல்வன் படத்தில் வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பே கிடையாது.
அதனால் முதல்வன் படத்தின் க்ளைமேக்ஸ் பாடலை தேனியில் படமாக்கினோம். பாடலுக்காக வெளிநாடு போக வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. வெளிநாடுகளில் நாம் பார்க்காத இடம் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது, அதை பார்த்துவிடலாம் என்று நினைத்து எதையும் செய்வதில்லை. முதல்வன் படத்தில் தேன்மொழியை பார்க்க புகழேந்தி கிராமத்திற்கு செல்வார். அதனால் அந்தப் பாடல் காட்சியை கிராமத்தில் தான் படமாக்கினோம் என விளக்கம் கொடுத்துள்ளார். ஷங்கரின் இந்த அடடே விளக்கத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.