திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகேயுள்ள சேனியர் கள்ளிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாபு (28). இவர் சமயபுரம் கோயில் அருகிலுள்ள பூக்கடை ஒன்றில் பூ கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். மது அருந்தும் பழக்கமுள்ள பாபு, நேற்றிரவு சமயபுரம் நால்ரோடு அருகிலுள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்தச் சென்றிருக்கிறார். அப்போது, சமயபுரம் அருகேயுள்ள வி.துறையூர் பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் அதே பாரில் மது அருந்தியிருக்கின்றனர். இந்த நபர்களுக்கும், பாபுவுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அடிதடி சண்டையாகியிருக்கிறது.

ஒரு கட்டத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பல், பாபுவைச் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலைசெய்துவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடியிருக்கின்றனர். இதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாபு சரிந்து விழுந்திருக்கிறார். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் பாபுவை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பாபு பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் குறித்து சமயபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, வழக்கு பதிவுசெய்து கொலையாளிகளைத் தேடிவருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் பாபுவுக்கும், கொலையாளிகளுக்குமிடையே கடந்த சில நாள்களாக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களைக் கோயிலுக்குள் அழைத்துச் செல்வதில், முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அதாவது வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்களைக் கோயிலுக்குள் அழைத்துச் சென்று, வேகமாக சாமி தரிசனம் செய்ய வைக்க தொகை வசூலிக்கும் நபர்கள் இருக்கின்றனர். அப்படியானவர்கள்தான் கொலையான பாபுவும், கொலையாளிகளும். சம்பவத்தன்றுகூட கொலையாளிகள் 2,000 ரூபாய்க்கு பக்தர்களை அழைத்துச் செல்ல, 1,500 ரூபாய் கொடுத்தால் நான் அழைத்துச் செல்கிறேன் என பாபு சொல்லியிருக்கிறார்.

அப்போதே இருதரப்புக்குமிடையே சண்டை நடந்திருக்கிறது. அதன் காரணமாகவே பாபு கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்கின்றனர். இந்தச் சம்பவம் குறித்து சமயபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, வழக்கு பதிவுசெய்து கொலையாளிகளைத் தேடிவருகின்றனர்.