ராஜஸ்தான்: ஆக தனிக்கட்சியும் இல்லை.. ஆம் ஆத்மியிலும் சேரலை.. பொசுக்கு புஷ்ஷாக்கிய சச்சின் பைலட்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மூத்த தலைவர் சச்சின் பைலட் காங்கிரஸில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கும் அறிவிப்பை ஜூன் 11-ல் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜூன் 11-ல் சச்சின் பைலட் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் சச்சின் பைலட் தனிக் கட்சி தொடங்கப் போவதும் இல்லை; ஆம் ஆத்மி அல்லது மாநில கட்சி ஒன்றில் இணைவதும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஆனால் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் மூத்த தலைவர் சச்சின் பைலட் இடையேயான உட்கட்சி மோதலானது ராஜஸ்தானில் காங்கிரஸ் கனவை குழிதோண்டிப் புதைக்கும் வகையில்தான் இருக்கிறது.

இதனால் அண்மையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்டோரை டெல்லிக்கு வரவழைத்து காங்கிரஸ் மேலிடம் நீண்ட ஆலோசனை நடத்தியது. இதில் ராகுல் காந்தியும் பங்கேற்றார். அப்போது, அனைவரும் இணைந்து கர்நாடகா பாணியில் தேர்தலை சந்தித்து வெல்வோம் என அறிவித்திருந்தனர்.

ஆனால் இந்த அறிவிப்பு சிறிது நாட்கள் கூட நீடிக்கவில்லை. ராஜஸ்தானில் முந்தைய பாஜக அரசுக்கு எதிரான ஊழல் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என சச்சின் பைலட் மீண்டும் போர்க்கொடி தூக்கினார். இதனால் சச்சின் பைலட் இம்முறை காங்கிரஸில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கும் அறிவிப்பை அவரது தந்தை ராஜேஷ் பைலட் மறைந்த நாளான ஜூன 11-ல் வெளியிடுவார் என தகவல்கள் வெளியாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சச்சின் பைலட் நேற்று காலை தந்தையின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தியது முதல் அவரது ஒவ்வொரு நகர்வுகள், பேச்சுகளும் உன்னிப்பாக காங்கிரஸ் மேலிடத்தால் கண்காணிக்கப்பட்டன. ஆனால் கடைசி நிமிடம் வரை சச்சின் பைலட் தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடவில்லை. காங்கிரஸில் இருந்து வெளியேறுவதாக கூட சமிக்ஞையான பேச்சை கூட வெளியிடவில்லை.

அதேநேரத்தில் முந்தைய பாஜக அரசுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் அதற்காக தாம் தொடர்ந்து போராடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார் சச்சின் பைலட். இதனால் முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு குடைச்சல் தொடரத்தான் செய்யும் என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.

மேலும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர்; அப்போது சச்சின் பைல்ட் மாநில தலைவராக அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அப்படி சச்சின் பைலட் மாநில தலைவரானால் அவரது தலைமையை அசோக் கெலாட் ஏற்க மறுப்பார். இதனால் என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறதாம் காங்கிரஸ் மேலிடம்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.