அமைச்சர்களின் இலாகா மாற்றம்: ஆளுநருக்கு இதில் அதிகாரம் இல்லை – வைகோ கடும் கண்டனம்!

அரசியலமைப்புச் சட்டபடி மாநில அமைச்சர்கள் நியமனம் மற்றும் அவர்கள் வகிக்கும் இலாகா மாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டியது முதல்வரின் அதிகாரம் என்று கூறியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாலும், உடல் நலம் இன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருப்பதாலும் அவர் வகித்து வரும் துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு மாற்றிட முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பி உள்ளார்.

அதன்படி மின்சாரத் துறையை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களுக்கும் மாற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக முதல்வர் கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஏற்காமல் திருப்பி அனுப்பி இருக்கிறார்.

அரசியல் சட்டப்பிரிவு 163-ன் படி, முதல்வரின் தலைமையிலான அமைச்சரவையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி ஆளுநர் கடமையாற்ற வேண்டும். முதல்வரின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவையின் மற்ற உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும். எனவே அரசியலமைப்புச் சட்டபடி மாநில அமைச்சர்கள் நியமனம் மற்றும் அவர்கள் வகிக்கும் இலாகா மாற்றங்கள் குறித்து தீர்மானிக்க வேண்டியது முதல்வரின் அதிகாரமாகும். ஆளுநர் இதில் தலையிட அரசியல் சட்டத்தில் இடம் இல்லை.

அரசியல் சட்ட மரபுகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்களின் இலாகா மாற்றம் தொடர்பான முதல்வரின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். முதல்வர் மீண்டும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பினால் உடனே அதனை ஏற்று அமைச்சர்களுக்கு துறைகளை பகிர்ந்து அளிக்க ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.