ஒரு தாய் தன் உடல்நல, மனநலப் பிரச்னைகளால் குழந்தையாகிவிட, அவரின் இரண்டு பிள்ளைகளும் தாயாகி அவரை பார்த்துக்கொள்ளும் நெகிழ்ச்சி ஒரு பக்கம். இந்த இன்னல்களுடன் கூடவே வறுமையும் அந்த மூவரையும் விரட்டும் துயரம் ஒரு பக்கம். இதுதான் குருபாக்கியம் வீட்டின் நிலை. அதிலும், அந்த எட்டு வயது சிறுமி சமைப்பது, வீட்டு வேலை பார்ப்பது என சுமக்க முடியாத பொறுப்புகளை சுமக்கும் காட்சிகள் மனம் கனக்கச் செய்கிறது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ளது சேத்தூர் பேரூராட்சி. தேசிய நெடுஞ்சாலையில், எந்நேரமும் ஓயாத வாகனச்சத்தத்துக்கு மத்தியில் இயந்திரமாய் ஓடும் மனிதர்கள், அதற்கு இருமடங்காய் உழைக்கும் மெஷின்கள் எனத் தொழிலாளர்கள் நிறைந்த அவ்வூரில்தான் குருபாக்கியம் தன் இரு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்.

குருபாக்கியம்… கணவனால் கைவிடப்பட்ட நிலையில் மனப்பிறழ்வுக்கு ஆளானவர். பள்ளி பயிலும் தன் இரு பிள்ளைகளையும் கண்ணும், கருத்துமாய் கவனிக்க வேண்டிய குருபாக்கியம், நோய்ப்பட்ட குழந்தையாய் தன் பிள்ளைகளின் கவனிப்பில் இருக்கிறார். எனில், அந்தப் பிள்ளைகளை யார் கவனிப்பது? அவர்களின் கல்வி? எங்களுடன் நீங்களும் குருபாக்கியம் வீட்டுக்கு வரவிருக்கும் இந்தக் கட்டுரையில்… கேள்விக்கான விடைகள் உள்ளன.
சேத்தூர் பேரூராட்சி, பழைய காவல்நிலையத் தெருவில் ஒரே ஒரு சின்ன அறை கொண்ட குறுகலான வாடகை வீடு. “நான் என்னிக்கு நல்லாயிருப்பேன், என்னிக்கு உடம்பு சொகமில்லாம போவேன்னு சொல்ல முடியாத அளவுக்கு நோய் என்னை படுத்துது…’’ என்றபடி பேச ஆரம்பித்தார் குருபாக்கியம்.
“எனக்கு 20 வயசுல கல்யாணமாச்சு. கணவர் கனகராசு கொத்தனார் வேலை பார்த்துகிட்டு இருந்தாரு. கல்யாணமான நாளுல இருந்து இந்த வீட்டுலதான் குடியிருக்குறோம். அவரு தெனமும் குடிச்சிட்டு வந்து வீட்டுல சண்டை போடுவாரு, அடிப்பாரு. என் மகன் பொறந்தப்போ, அவரோட குடி ஓவராக, அவருக்கு வேலை கொடுக்குறவங்க எல்லாம் ‘இனி உன் புருஷன் வேலைக்கு வரவேண்டாம்’னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. வெட்டியா ஊரை சுத்திக்கிட்டு வீட்டுலேயே இருந்தாரு. கஷ்டத்தை சமாளிக்க நான் வீட்டு வேலைகளுக்குப் போய் பாத்திரம் தேய்ச்சேன்.

ஆனா அவரு கடன் வாங்கி குடிச்சிக்கிட்டு இருந்தாரு. ஒரு கட்டத்துல… என்னையும் மகனையும் விட்டுட்டுப் போயிட்டாரு. நாங்களும் உழைச்சு, தனிச்சுனு வாழப்பழகினோம். சில வருஷம் கழிச்சு மறுபடியும் வந்தாரு. கொஞ்ச நாள்ல மறுபடியும் எங்கேயோ காணாமப் போயிட்டாரு. அப்போ நான் ரெண்டாவது குழந்தை கர்ப்பமாகியிருந்தேன். பொம்பளைங்க பொழப்பு இவ்வளவுதான்…’’ என்றவருக்கு, ஆற்றாமையும் அழுகையும் முட்டிக்கொண்டு வந்தது.
“என் பொண்ணுக்கு இப்போ 8 வயசு. அவரு இதுவரை வரவே இல்ல. அநியாயமா, அநாதரவா அவரு எங்க மூணு பேரையும் விட்டுட்டுப் போனதை நினைச்சு அழுது அழுது எனக்கு பிரஷர் அதிகமாயிருச்சு. ரோட்டுல நடந்து போகும்போது, வீட்டுல வேலைபார்க்கும்போது, வேலை செய்யுற வீடுகள்ல சமைக்கும்போது எல்லாம் மயக்கமாகி கீழ விழுந்திருக்கேன்.

இதனால பலரும் எனக்கு வேலை கொடுக்க தயங்கினாங்க. பிரஷரோட சேர்த்து, என மனநிலையும் பாதிக்கப்பட்டுச்சு. ஒரு முறை வீட்டுல சமைச்சுட்டு இருக்கும்போது, பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகிடுச்சு. அப்போ… கொதிக்கிற எண்ணெய் சட்டியை என் மேல நானே ஊத்திக்கிட்டேன். என் வலது தோள்பட்டையில இருந்து மணிக்கட்டு வரை கைமுழுக்க தோல் வெந்து போச்சு. வலியில் அலறித் துடிச்சப்போதான் எனக்கு சுயநினைவே வந்த மாதிரி இருந்துச்சு.
ஆஸ்பத்திரியில சிகிச்சைக்காக சேர்த்தாங்க. அரசு ஆஸ்பத்திரினாலும் சில மருந்துகள வெளிய வாங்க வேண்டி இருந்தது. அதுக்குப் பணம் இல்ல. அப்போதான் என் விதி என் புள்ளைகளையும் சுத்தி இழுத்துட்டு வந்து கஷ்டத்டோட கட்டுச்சு…’’ – அழுகை பெருக, வார்த்தைகள் தடைபட, சில நொடிகளுக்குப் பின் தொடர்ந்தார்.

“ `அப்பாவும் விட்டுட்டுப் போயிட்டாரு, அம்மாவுக்கும் உடம்பு, மனசு நோவாகிருச்சு, இனி நான்தான் இந்த வீட்டுக்கு’னு என் மகன் சுரேஷ் பொறுப்பை தூக்கி தன் தலையில வெச்சுக்க ஆரம்பிச்சான். எட்டாவது படிச்சிக்கிட்டிருந்த அந்த பிஞ்சு… கூலி வேலைக்குப் போய் சம்பாதிச்சு எனக்கு வைத்தியம் பார்த்து ஆஸ்பத்திரியில இருந்து கூட்டிட்டு வந்துச்சு.
இந்த சம்பவத்துக்குப் பிறகு யாரும் எனக்கு வேலை கொடுக்கல. டாக்டர்கள், மனநோய் இருக்குனு சொல்லி தெனமும் சாப்பிட மாத்திரை எழுதிக் கொடுத்தாங்க. சாப்பிடாம விட்டா அது மாதிரி அடிக்கடி நடக்கும்னு சொன்னாங்க. இப்பவரைக்கும் அந்த மருந்து, மாத்திரையை என் மகன்தான் உழைச்சு வாங்கிக் கொடுக்கிறான்.

அப்பா இல்லாத பிள்ளைகளை அப்பா ஸ்தானத்துல இருந்து நான் வளர்க்க நினைச்சேன். ஆனா என் நிலைமை இப்படி ஆனதால, இப்போ என் ரெண்டு புள்ளைகளும் அப்பாவும், அம்மாவுமா இருந்து என்னை கவனிச்சிக்கிறாங்க. எட்டு வயசுதான் ஆகுது என் பொண்ணு மகாலட்சுமிக்கு. அது வீட்டு வேலை பார்க்கிறதையெல்லாம், என் இயலாமையால அழுதபடியே பார்த்துக்கிட்டு இருக்கேன்.
தோல் வெந்து போனதுல எனக்கு கைகூடி வரல. வலது கையை ஒரு அளவுக்கு மேல என்னால மடக்கி, நீட்ட முடியாது. அதனால வீட்டுல சோறு பொங்குற வேலையில இருந்து பாத்திரம் கழுவுறது வரை பொண்ணு பார்க்குது. இத்தனை கஷ்டத்துலயும் ஆண்டவன் எனக்குக் கொடுத்திருக்கிற வரம்… என் புள்ளைங்க.

இதுக எனக்குக் கிடைக்க நான் என்ன புண்ணியம் பண்ணினேனோ தெரியல. நான் இப்படியே செத்துட்டாலும் பரவாயில்ல… அதுங்க நல்லா இருக்கணும். அதுக்கு அவங்கள படிக்க வைக்கணும். அதுக்கு மகராசங்க உதவி செஞ்சா அவங்க கால்ல விழுந்து கும்பிட்டுப்பேன்…” என அழுத கண்களோடு அமைதியானார் குருபாக்கியம்.
குருபாக்கியத்தின் மகன் சுரேஷின் வார்த்தைகளில், வலி தந்த முதிர்ச்சி. “நான் எட்டாவது படிச்சப்போ எங்க அம்மாவுக்கு கை வெந்துபோன சம்பவம் நடந்துச்சு. அந்த நேரம் கொரோனா லாக்டௌனால ஸ்கூல் இல்ல. அப்பாவும் இல்ல, அம்மாவுக்கும் உடம்பு சரியில்ல… இனி என்ன பண்ணப் போறோம்னு மனசுல ஒரு பயம் வந்துச்சு.
வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். ஒருவழியா ஸ்கூல் திறக்குறதுக்குள்ள அம்மாவை ஆஸ்பத்திரியில இருந்து வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன். எங்களை பத்தி தெரிஞ்ச ஒரு தன்னார்வலர் அமைப்பு, எங்களுக்கு அரிசி, பருப்பு, செலவுக்குப் பணம்னு தந்து உதவினாங்க.

ஊரடங்கு தளர்வு கொடுத்தப்போ, வெளியில உதவி கேக்க எனக்குக் கூச்சமா இருந்ததால மறுபடியும் வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல சின்னப் பையன்னு 200 ரூபா கூலி தந்தாங்க. அப்புறம் என் வேலையை பார்த்துட்டு 250 ரூபாய் கூலி கொடுத்தாங்க. பிறகு என் சூழ்நிலை தெரிஞ்சப்போ 600 ரூபாய் சம்பளமும், அதுக்கேத்த வேலையும் கொடுத்தாங்க.
வீட்டு செலவு, அம்மாவுக்கு மருந்துனு பாத்துக்கிட்டேன். தங்கச்சி மகாலட்சுமி அப்போ இன்னும் சின்னப் பொண்ணு. ஏதாச்சும் வாங்கித் தரச்சொல்லிக் கேக்கும். அதுக்கெல்லாம் நமக்கு என்ன அப்பாவா இருக்காங்கனு அதுகிட்ட சொல்ல முடியாதுல்ல? அண்ணன் நான் இருக்கேன் என் தங்கச்சியை பார்த்துக்கிறதுக்குனு மனசுல நெனச்சுப்பேன்.
ஒவ்வொரு தடவை மருந்து வாங்கும்போதும், மீதி இருக்கிற சில்லரைக்கு என்ன மிட்டாய் வாங்க முடியுமோ அதை வாங்கிக்கொடுத்து சமாதானப்படுத்துவேன்’’ – தன் அண்ணன் பேசுவதை கண் அசையாமல் கேட்டுக்கொண்டிக்கிறது அந்தக் குழந்தை.

“அதுவரைக்கும் எங்களுக்குனு தனியா ரேஷன் கார்டு கிடையாது. அதனால முதல் வேலையா, தன்னார்வலர் அமைப்புல இருந்து எங்களுக்கு ரேஷன் கார்டு வாங்கிக் கொடுக்க எல்லா முயற்சியும் பண்ணினாங்க. அப்போ மாவட்ட ஆட்சியரா இருந்த மேகநாதரெட்டி சார் எங்க வீட்டுக்கே வந்து எங்களுக்கு ரேஷன் கார்டு கொடுத்தார். கூடவே அம்மாவுக்கு கணவனால் கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் கொடுத்து, ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்கிறதுக்கு வழி செஞ்சார். ஆதார் அட்டை, இருப்பிடச் சான்று, சாதி சான்றுனு எல்லா சான்றிதழ்களையும் அதிகாரிங்க ஏற்பாடு செஞ்சு கொடுத்தாங்க.
எங்களுக்கு சொந்த இடம், வீடு எதுவும் கிடையாது. அதனால அரசுத் தரப்புல இலவசப் பட்டா கொடுக்கச் சொல்லி கலெக்டர் உத்தரவு போட்டார். இங்கிருந்து 10 கிலோமீட்டர் தூரத்துல இருக்குற ஜமீன் கொல்லங்கொண்டான் ஊர்ல எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா தந்தாங்க. நான் வேலைக்குப் போக முடிவெடுக்க, வீட்டுக்கு வந்த தன்னார்வலர்கள் என்னை படிக்கச் சொன்னாங்க.
`யாருண்ணே எங்க வீட்டை பார்த்துக்குவா?’னு கேட்டேன். `நீ படிச்சி முடிக்கிற வரைக்கும் வீட்டுக்கு ஆகுற செலவுகளை நாங்க எங்க அமைப்பு மூலமா தர்றோம்’னு சொல்லி நம்பிக்கை கொடுத்தாங்க.
ஜனவரியில ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போயி 10-ம் வகுப்புல தொடர அனுமதி கேட்டாங்க. மாவட்டக் கல்வி அதிகாரி ஒப்புதலும் பரிந்துரையும் கொடுக்க, 10-ம் வகுப்புல சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். மார்ச் மாசம் நடந்த பொதுத்தேர்வுல 289 மதிப்பெண்கள் வாங்கி பாஸ் ஆனேன்.

மூணு மாசத்துல படிச்சி ஓரளவுக்கு நல்ல மார்க் வாங்கிருக்கேன்னு எல்லாரும் பாராட்டினாங்க. அது ஒருபக்கம் சந்தோஷமா இருந்தாலும், மறுபடியும் வேலையா, படிப்பானு குழப்பமாச்சு. அப்பவும் அந்த தன்னார்வலர்கள்தான், எனக்கு நம்பிக்கையும் தைரியமும் கொடுத்து ராஜபாளையத்துல தனியார் பாலிடெக்னிக் காலேஜ்ல ஏசி மற்றும் ஃப்ரிட்ஜ் மெக்கானிக் பிரிவுல சேர்த்துவிட்டாங்க.
என் படிப்புக்கான முதலாம் ஆண்டு ஃபீஸை அவங்கதான் கட்டுனாங்க. இங்கிருந்து ராஜபாளையத்துக்கு தினமும் பஸ்ல போயிட்டு வர்றதுக்கு ஆகுற செலவை, நான் பகுதி நேர வேலைக்குப் போயி பாத்துக்குறேன். படிச்சு முடிச்சதும் தங்கச்சியையும் படிக்க வெச்சுடணும்’’ – அந்த பதின் வயதுக்கும் அதிகமான மன உறுதியுடன் சொல்கிறார் சுரேஷ்.
குருபாக்கியத்தின் குடும்பத்திற்கு முதுகெலும்பாக உள்ள தன்னார்வலர் அமைப்பினரிடம் பேசினோம். ‘’குருபாக்கியம் குடும்பத்துக்கு இப்போ முதல் தேவை வீடுதான். அது கிடைச்சா அவங்க மாச செலவுல ஒரு தொகை கழியும், வளர்ற பிள்ளைங்க எதிர்காலத்துக்கும் பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சோம். குருபாக்கியம் குடும்பத்துக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனை பட்டா இடத்துல அரசின் உதவியோட வீடு கட்ட விண்ணப்பிச்சோம். ஆனா, குருபாக்கியம் வசிப்பது பேரூராட்சி, அவங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது ஊராட்சி பகுதி. எனவே, நடைமுறை சிக்கல் காரணமா அவங்களுக்கு உதவ இயலாதுனு சொல்லிட்டாங்க.

அரசை எதிர்பார்க்காம, குருபாக்கியத்துக்கு வீடுகட்டிக் கொடுக்க நாங்களே நன்கொடை கேட்டு பலரிடமும் உண்டியல் குலுக்கி பணம் சேகரித்தோம். அந்தப் பணத்தை கொண்டு அவங்களுக்கு வீடு கட்டி முடிச்சுட்டோம். வர்ற ஞாயித்துக்கெழம கிரகப்பிரவேசம் பண்ண இருக்கோம். நிதாதரவா நின்ன அம்மாவுக்கும் புள்ளைகளுக்கும், ஊர் கூடி கட்டிக் கொடுத்திருக்கிற வீட்டை பார்க்கும்போதெல்லாம்… மனுஷங்க மேல நிறைய நம்பிக்கை வருது.
இப்போ பிள்ளைகளோட கல்விச் செலவுக்கு உதவிகள் தேவைப்படுது. அதுக்கு வழி கிடைச்சா… இது வரை கஷ்டத்தை மட்டுமே பார்த்துட்டு வர்ற அந்தக் குடும்பத்துக்கு அது விடிவை கொண்டு வந்து தரும்’’ என்றனர் கோரிக்கையாக.
ஆதரவற்ற இந்த தாய், சேய்க்கு உதவிகள் கிடைத்து, இந்தப் பிள்ளைகள் படித்து இக்குடும்பத்தின் நிலை மாற வேண்டும்.
வாசகர்களின் கவனத்துக்கு…
வாழ்வாதாரம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு… கல்வி கற்க பொருளாதார பலம் இல்லாமல் போராடும் மாணவர்களுக்கு… உயிர் காக்க பணஉதவி கோருபவர்களுக்கு என, பலருக்கும் Vasan Charitable Trust தொடர்ந்து உதவி வருகிறது.
உதவும் உள்ளம் கொண்டவர்கள், Vasan Charitable Trust என்ற எங்களின் அறக்கட்டளையின் பெயருக்கு செக் அல்லது டி.டி எடுத்து அனுப்பலாம். நிதியை நெட் பேங்கிங் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோர், எங்களின் கனரா வங்கி சேமிப்பு கணக்கு எண் 0416132000052 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி. கோட்: IFSC CNRB0000416, தேனாம்பேட்டை கிளை, சென்னை-600018) வழியாக அனுப்பலாம்.

Vasan Charitable Trust பெயரில் நிதி உதவி அளிப்பவர்களுக்கு, 1961 வருமான வரிச் சட்டம் 80-ஜி பிரிவின்படி (உத்தரவு எண்: DIT(E)NO.2(749)/03-04 dt. 10-05-2010) வருமான வரி விலக்கு கிடைக்கும்.
நேயமிக்க வாசகர்களே… நீங்கள் அனுப்பும் வழிமுறை எதுவாக இருந்தாலும் `For Guru Bhakkiyam’ என்று மறவாமல் குறிப்பிடவும். நீங்கள் பணம் அனுப்பிய தகவலை `ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை – 600 002’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். அல்லது `[email protected]’ என்கின்ற மின்னஞ்சலுக்கு நீங்கள் செய்த பரிவர்த்தனைக்கான ஆவணங்களை அனுப்பி வைத்த பின் உங்களுக்கான ரசீதுகளை அனுப்பி வைக்கிறோம்.