வாஷிங்டன்: அமெரிக்காவில் நேற்று அதிபர் ஜோபைடன், பிரதமர் மோடி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த வேளையில் இந்தியாவில் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமை பற்றி பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி கவனத்தை ஈர்த்த பெண் பத்திரிகையாளர் பற்றிய முக்கியமான பின்னணி தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். நேற்று முன்தினம் நியூயார்க் நகரில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடந்த சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேலும் தொழில்அதிபர்களை சந்தித்து இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
அதன்பிறகு நேற்று பிரதமர் மோடி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு அவரை அமெரிக்க அதிபர் ஜோபைடன், மனைவி ஜில்பைடன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். இதையடுத்து அங்கு நடந்த நிகழ்ச்சியில் இந்தியர்கள், அமெரிக்கர்கள் மத்தியில் ஜோபைடன், பிரதமர் மோடி உரையாற்றினர்.
அதன்பிறகு அவர்கள் 2 பேரும் இருநாடுகளின் உறவு பற்றி தனியே பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் நடப்பதாக அமெரிக்க எம்பிக்கள் குற்றம்சாட்டிய நிலையில் அதுபற்றி ஜோபைடன் நிச்சயம் பேச வேண்டும் என வலியுறுத்தினர். மேலம் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் இதுதொடர்பாக கட்டுரை வெளியிட்டு ஜோபைடனுக்கு கோரிக்கை வைத்தது.
இதனால் இந்த சந்திப்பு என்பது அதிக கவனத்தை ஈர்த்தது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி பத்திரிகையாளர்களை சந்திக்காமல் இருந்து வரும் நிலையில் இந்த நிகழ்வு என்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேபோல் தான் அனைவரும் எதிர்பார்த்தபடியே பத்திரிகையாளர் ஒருவர் பிரதமர் மோடியிடம் கேள்வி ஒன்றை முன்வைத்தார். அதாவது இந்தியாவில் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், பேச்சுரிமையை நிலைநிறுத்துவதற்கும் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இந்த கேள்வி கேட்டவுடன் பிரதமர் மோடி கூறும் பதிலை அனைவரும் எதிர்பார்த்தனர். அதற்கு பிரதமர் மோடி, ‛‛இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டும் ஜனநாயக நாடுகள். ஜனநாயகம் என்பது டிஎன்ஏவில் உள்ளது. நம்முடைய உணர்வில் உள்ள ஜனநாயகத்தின் படியே வாழ்ந்து வருகிறோம். அதன்படியே அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டுள்ளது. எனவே சாதி, மதம் அல்லது மதத்தின் அடிப்படையில் பாகுபாடு என்ற கேள்விக்கு இடமில்லை. அதனால்தான், இந்தியா அனைவருக்கும் வளர்ச்சி, அனைவருக்குமான முயற்சி என்ற நம்பிக்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து முன்னோக்கி எடுத்து செல்லப்படும். இவைதான் அடிப்படை கொள்கைகளாக இருக்கின்றன. அரசின் சலுகைகள், திட்டங்களின் பயன்கள் அனைவருக்கும் கிடைக்கும்” என்றார்.
இதற்கிடையே தான் பிரதமர் மோடியிடம் இந்த கேள்வியை கேட்ட பத்திரிகையாளர் யார்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதாவது பிரதமர் மோடியிடம் இந்த கேள்வியை கேட்டது ஒரு பெண் பத்திரிகையாளர் ஆவார். அவரது பெயர் சப்ரினா சித்திக். இவர் வால்ஸ்டீரிட் பத்திரிகையாளர் ஆவார். இந்த பத்திரிகை நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிலையில் சப்ரினா சித்திக் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை தொடர்பான செய்திகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 2019க்கு முன்பு கார்டியனில் பணியாற்றினார். அப்போது 2016ல் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் செய்தியை சேகரித்த அனுபவம் கொண்டிரு்நதார். இவர் அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் படித்தார். தற்போது தனது கணவருடன் வாஷிங்டனில் தங்கி பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.