மதுரை: கோயில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மலக்கோட்டையைச் சேர்ந்த ஜெயந்தி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மலக்கோட்டை கிராமத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் ஸ்ரீ சாந்தி வீரன் சாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆனி மாதம் 8 நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம். கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது என 2020-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதை எதிர்த்தும், கோயில் விழாவில் தலைப்பாகை அணியவும், குடை பிடிக்கவும், மதல் மரியாதை அளிக்கவும் கோரி சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தள்ளுபடியானது. அதே நபர்களால் இந்தாண்டு விழாவில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், ஆனி மாத திருவிழாவில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே சாந்தி வீரன் சாமி கோயில் ஆனி மாத திருவிழாவில் யாருக்கும் தலைப்பாகை அணியவும், குடை பிடிக்கவும் முதல் மரியாதை வழங்க கூடாது எனவும், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்களை கோயிலுக்குள் அனுமதிக்கவும், திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி சுப்பிரமணியன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் தலைமை நீதிபதி அமர்வு, கோயில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக் கூடாது. அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் கோயில் திருவிழாவில் வழிபடுவதையும் அறநிலையத் துறை உறுதி செய்ய வேண்டும். இதனை கோயில் தக்கார் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டது.