மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக பூர்வீக பழங்குடி இன மக்களுக்கும், மீட்டி இன மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. மீட்டி இன மக்களுக்கு எஸ்.டி. அந்தஸ்து கொடுக்கக்கூடாது என்று குக்கி இன பழங்குடியின மக்கள் போராடி வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வரும் மோதல் மற்றும் மோதலை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளில் இதுவரை 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர்.
போராட்டக்காரர்கள் மத்திய, மாநில அமைச்சர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். வன்முறையை கட்டுப்படுத்த ராணுவத்தினரும், மத்திய, மாநில ரிசர்வ் படையும் நிறுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் வன்முறை குறையவில்லை. பிரச்னைக்கு தீர்வு காண மத்திய அமைச்சர் அமித் ஷா அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என்று அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.

மணிப்பூரில் பல இடங்களில் தாக்குதல் நடத்திய கங்லி யாவோல் கண்ண லுப் என்ற மீட்டி இன அமைப்பை சேர்ந்த 12 நபர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு மேலும் சில முக்கிய நபர்கள் கிராமத்திற்குள் பதுங்கி இருந்தனர். ஆனால் கைது செய்யப்பட்டவர்களை ராணுவத்தினர் அழைத்து செல்ல விடாமல் பொதுமக்கள் ராணுவத்தினரை சுற்றி வளைத்தனர். குறிப்பாக பெண்கள் தலைமையில் 1200 முதல் 1500 பேர் வரையிலான பொதுமக்கள் ராணுவத்தை சுற்றி வளைத்து சிறை வைத்தனர்.
அதோடு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். நேற்று முழுக்க போராட்டக்காரர்களுடன் ராணுவத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. 12 பேரையும் விடுவிக்காமல் நகரமாட்டோம் என்று கூறி இரவு முழுக்க ராணுவத்தினரை சுற்றி வளைத்து பொதுமக்கள் அமர்ந்திருந்தனர். இதையடுத்து இன்று காலையில் 12 பேரையும் ராணுவத்தினர் விடுதலை செய்தனர். சுற்றி இருந்த பொது மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தீவிரவாதிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை மட்டும் ராணுவத்தினர் எடுத்து சென்றனர். சம்பவ இடத்தில் இன்னும் பதட்டம் நிலவி வருகிறது. இதையடுத்து அங்கு கண்காணிப்பை ராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். உள்ளூர் ராணுவம் எடுத்த இந்த முடிவை ராணுவ தலைமை பாராட்டி இருக்கிறது.