ரோகித் சர்மாவுக்குப் பிறகு இந்திய அணிக்கு கேப்டன் இவர் தான் தகுதியானவர் – ரவி சாஸ்திரி

ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி இதுவரை ஒரு ஐசிசி போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. டி20 உலகக் கோப்பை 2021-க்குப் பிறகு, டி20 அணியின் கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட்டார்.  2022 ஆம் ஆண்டில், அவர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணி என மூன்று வடிவங்களிலும் இந்திய அணிக்கு கேப்டனாக தலைமை தாங்கினார். 2023 ஒருநாள் உலகக் கோப்பை கேப்டனாக ரோஹித்துக்கு ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது. இருப்பினும், 2023 உலகக் கோப்பைக்குப் பிறகு, ரோஹித்துக்குப் பதிலாக வெள்ளைப் பந்து தொடர்களுக்கு புதிய வீரர் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ரோஹித்துக்கு அடுத்து புதிய கேப்டன்
 
2023 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு, ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியின் வெள்ளைப் பந்து தொடர்களுக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும். 2022 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 அணியின் பகுதிநேர கேப்டனாக  செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா, தனது பணிகளை சிறப்பாக செய்து வருவதாக கூறியிருக்கும் அவர், நிச்சயம் பாண்டியாவிடம் கேப்டன் பதவியை ஒப்படைக்கலாம் என தெரிவித்துள்ளார்.

ரவி சாஸ்திரி சொல்வது என்ன?

ரவி சாஸ்திரி அண்மையில் அளித்த பேட்டியில், “வெளிப்படையாகச் சொன்னால், ஹர்திக் பாண்டியாவுக்கு இருக்கும் உடல் தகுதியைக் கொண்டு அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது. ஆனால் வெள்ளை நிற பந்துகளில் விளையாடப்படும் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு இந்திய அணியின் கேப்டனாக உலகக் கோப்பைக்குப் பிறகு நியமிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உலகக் கோப்பையில் இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்த வேண்டும், அதில் எந்த கேள்வியும் இல்லை” என தெரிவித்தார்..

ஐபிஎல் தொடரில் செயல்பாடு

ஐபிஎல் 2022-ல், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஹர்திக் பாண்டியா ஏற்றார். அந்த தொடரிலேயே அவரது தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த ஐபிஎல் சீசனிலும் அவர் தனது அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். இதனால் ஒரு கேப்டனாக அவர் தன்னை நிரூபித்து காட்டிவிட்டதால், இந்திய அணிக்கான கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.