யூ டியூப் மூலம் யார் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்க முடியும். பொழுதுபோக்கு செயலியாக இருந்த யூடியூப், வருமானம் கொடுக்கும் செயலியாக இப்போது மாறிவிட்டது. மேலும் நம்பகமானதாக இருப்பதால் படித்தவர்கள் படிக்காதவர்கள் என தங்களின் திறமைகளை மட்டும் நம்பி யூடியூப்பில் சேனலை தொடங்கி அதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் கோடிக்கணக்கானோர் இருக்கின்றனர். முதலீடு இல்லாமல் சம்பாதிக்கும் வழியாக யூ டியூப் இருப்பதே அதன் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. இதனால் யூடியூப் தொடங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.
அதேநேரத்தில் உங்களின் வீடியோக்கள் தரமானதாக இருந்தால் மட்டுமே எதிர்பார்க்கும் வருவாயை ஈட்ட முடியும். மக்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெறும். அதற்காக யூடியூப் நிறுவனம் சில வழிமுறைகளை வைத்திருக்கிறது. இதுவரை இருந்த அந்த விதிமுறைகள் சற்று சவாலாகவே இருந்த நிலையில் அதனையும் இப்போது தளர்த்தியிருக்கிறது யூடியூப் நிறுவனம்.
இதுவரை இருந்த விதிமுறை
யூடியூப் நிறுவனத்தின் பழைய விதிமுறைப்படி, உங்க சேனல் மானிடைசேஷன் செய்வதற்கு குறைந்தபட்சம் 1000 சப்ஸ்கிரைபர்கள், ஒரு ஆண்டில், நீங்கள் பதிவிடும் வீடியோக்களை 4,000 மணி நேரம் பார்வையாளர்கள் பார்த்திருக்க வேண்டும் அல்லது 90 நாட்களுக்கு யூடியூப் ஷார்ட்ஸ்களின் வியூஸ் 10 மில்லியனை எட்டியிருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை அடைந்தால் மட்டுமே யூடியூப் சேனலை உங்களால் மானிடைஸ் செய்ய முடியும். தற்போது, இந்த அளவீடுகள் அதிரடியாக தளர்த்தப்பட்டுள்ளது.
யூடியூப் புதிய விதிமுறை:
யூடியூப் நிறுவனத்தின் புதிய மானிடைசேஷன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகளின்படி, தற்போது உங்க சேனல் வெறும் 500 சப்ஸ்கிரைபர்களை கொண்டிருந்தாலே போதும். மேலும், 90 நாட்களில் 3 வீடியோக்களை பதிவிட்டிருக்க வேண்டும். இந்த வீடியோக்களை 3000 மணி நேரம் பார்வையாளர்கள் பார்த்திருக்க வேண்டும். அல்லது யூடியூப் ஷார்ட்ஸ்களின் வியூஸ் 3 மில்லியனை எட்டியிருக்க வேண்டும். இந்த அளவீடுகள் இருந்தாலே உங்க சேனலை மானிடைசேஷன் செய்து கொள்ளலாம்.
புதிய படைப்பாளர்களுக்கு வரப்பிரசாதம்
இந்த புதிய விதிமுறை புதிய படைப்பாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சேனல் தொடங்கும் யார் வேண்டுமானாலும் விரைவில் வருவாய் ஈட்ட இந்த விதிமுறை வழிவகை செய்திருக்கிறது. முதலில் அமெரிக்கா, தைவான், கனடா, தென்கொரியாவில் அமல்படுத்தப்படும் இந்த விதிமுறை, விரைவில் மற்ற நாடுகளிலும் விரிவுப்படுத்தப்பட இருக்கிறது.