புதுடில்லி: இந்தியா – பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில், தகவல் தொடர்பு கோபுரங்கள், பூமிக்கு அடியில் ‘கேபிள்’கள் அமைப்பது உட்பட, ராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியில் பாகிஸ்தானுக்கு, சீனா உதவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் எல்லை பகுதியில், ‘ஹாவிட்ஸர்’ துப்பாக்கி பொருத்தப்பட்ட, ‘எஸ்எச்15’ ரக வாகனங்கள் சமீபத்தில் தென்பட்டதாக நம் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவின், ‘நார்த் இண்டஸ்ட்ரீஸ் குரூப்’ என்ற நிறுவனம் தயாரிக்கும் இவ்வகை ஆயுதம் தாங்கி வாகனங்களை பாகிஸ்தான் வாங்கி வருகிறது. 236 வாகனங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ராணுவ பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடந்து வரும் ராணுவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியில், சீனா பெரும் அளவில் உதவி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், அதிக எண்ணிக்கையிலான சீன ராணுவத்தினர் அப்பகுதியில் தென்படுகின்றனர்.
சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்தில் இருந்து, பாக்.,கின் கராச்சியில் உள்ள குவாடார் துறைமுகத்தை இணைக்கும் சீன – பாக்., பெருவழிச்சாலை திட்டத்துக்கான பணிகளும் அங்கு நடந்து வருகின்றன.
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள லீபா பள்ளத்தாக்கு பகுதியில் மலையை குடைந்து சுரங்கப் பாதை ஏற்படுத்தும் பணியில் சீனர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த தகவல் தொடர்பு நிறுவனம் ஒன்றை, 2007ல் சீனா கையகப்படுத்தியது.
தற்போது, ‘சீனா மொபைல் பாகிஸ்தான்’ என்ற பெயரில், அந்நிறுவனம் தகவல் தொடர்பு சேவைகளை அளித்து வருகிறது.
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், மொபைல் போன் சேவையில் அந்நிறுவனம் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை வழங்க, பாக்., அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்தது.
அது தொடர்பான கேபிள் பதிக்கும் பணிகளும் தற்போது நடந்து வருகின்றன. இந்த விவகாரத்தில் நம் ராணுவம் அமைதி காத்து வந்தாலும், உளவுப்படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்