பிடிஆர் அலுவலகத்தில் குவியும் மக்கள் கூட்டம்.. மதுரையில் இப்படி ஒரு இலவச சேவையா? அசத்திட்டாரே!

மதுரை: தனது சொந்த தொகுதியான மதுரை மத்திய தொகுதியில் இலவச இ சேவை மையத்தை தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆரம்பித்து வைத்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, மக்களைத் தேடி, அவர்கள் வாழும் பகுதிகளுக்கே சென்று சேவைகளை வழங்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இ-சேவை மையத் திட்டத்தினை நடத்தி வருகிறது.

தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மகபூப்பாளையத்தில் அமைந்துள்ள தனது மத்திய தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் தொடங்கி வைத்துள்ளார்.

மேலும், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் அரசு வழங்கும் இ-சேவைகளைத் இங்கே இலவசமாகப் பெற்றிட வகைச்செய்துள்ளார. இந்த தகவல் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ சர்ச்சைக்கு பின்னர், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை ஆக மாற்றப்பட்டார். ஐடி துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, நிதியமைச்சர் பொறுப்பிற்கு மாற்றப்பட்டார். தொழில்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பால்வளத்துறைக்கு மாற்றப்பட்டார். இதேபோல் தொழில்துறை அமைச்சராக டிஆர் பாலுவின் மகனும், மன்னார்குடி எம்எல்ஏவுமான டிஆர்பி ராஜா நியமிக்கப்பட்டார்.

நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட பின்னர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மிக அமைதியாகவிட்டார். முன்பு போல் செய்தியாளர்கள் சந்திப்பில் அவரை பார்க்க முடிவது இல்லை. மதுரை மாநகராட்சி தொடர்பான விஷயங்களிலும் அவர் தலையிடுவதையே அடியோடு நிறுத்திவிட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது தொகுதி சார்ந்த திட்டங்கள், தனது துறை சார்ந்த திட்டங்கள் தவிர வேறு எதை பற்றியும் அவர் இப்போது பெரிதாக பேசுவதே இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சராகிய பின்னர் தனது துறை சார்ந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

இந்நிலையில் தனது சொந்த தொகுதியான மதுரை மத்திய தொகுதியில் இலவச இ சேவை மையத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். அரசு வழங்கும் சான்றிதழ்களை, அரசு அலுவலங்களில் வாங்கும் பொதுமக்களின் அலைச்சலை குறைக்க, மக்கள் வாழும் பகுதியிலேயே எளிதாக கிடைக்கும் வண்ணம், ஆங்காங்கே இசேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிலும் ஒருபடி மேலே சென்று, அரசு வழங்கும் இ சேவைகளை தனது அலுவலகத்தில் இலவசமாக கிடைத்திட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வழிவகை செய்துள்ளார். முதியோர் உதவி தொகை, ஆதரவற்ற பெண்கள் உதவி தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவி தொகை, வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், ஓபிசி சான்றிதழ், அமைப்பு சாரா தொழிலாளர் அடையாள அட்டை மற்றும் வருவாய் துறையின் அனைத்து சான்றிதழ்களும் இலவமாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அலுவலத்தில் பதியலாம்.


Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.