அமெரிக்காவில் ஸ்டார்பக்ஸ் குழுமத்துக்கு எதிராக திரண்ட ஊழியர்கள்: காரணம் என்ன?

மான்ஹாட்டன்: ஸ்டார்பக்ஸ் கஃபே குழுமத்தின் அமெரிக்கக் கிளைகளின் ஊழியர்கள் திடீரென அந்நிறுவனத்துக்கு எதிராக உரிமைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டார்பக்ஸ் கஃபே உலகெங்கும் பல்வேறு நாடுகளிலும் கிளைகள் கொண்ட எலைட் காபிக் கூடம். இது அமெரிக்காவின் சீட்டல் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு நிறுவனம்.

இந்த கஃபேவின் அமெரிக்கக் கிளைகளில் திடீரென ஊழியர்கள் சிலர் போராட்டத்தில் குதித்தனர். பணி நெருக்கடி, சம்பள உயர்வு எல்லாம் காரணமல்ல. ஆனால் இதுவும் உரிமைக்கான போராட்டம்தான். ஆம், தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்பட எல்ஜிபிடிக்யூ ப்ளஸ் சமூகத்தினரின் ப்ரைட் மாதம் அனுசரிக்கப்படும் நிலையில் பல்வேறு ஸ்டார்பக்ஸ் கிளைகளிலும் அதனை அடையாளப்படுத்தும் வானவில் கொடிகளும், பலூன்களும் இன்னும் பிற அலங்காரங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி ஊழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நியூயார்க்கின் மான்ஹாட்டன் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ப்ரைட் பேரணி நடைபெறவிருந்த நிலையில் அங்கே ஸ்டார்பக்ஸ் ஊழியர்கள் சிலர் திரண்டு நிறுவனத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஸ்டார்பக்ஸ் நிறுவன செய்தித்தொடர்பாளர் ஒருவர், “நாங்கள் எல்ஜிபிடிக்யூ சமூகத்தினரை முழுமையாக ஆதரிக்கிறோம். அதனால் ஸ்டார்பக்ஸ் நிறுவனக் கிளைகளில் ப்ரைட் மாத கொண்டாட்டத்தின் அடையாளங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறுவது ஏற்புடையதல்ல. எங்களைப் பற்றித் தவறான தகவல்கள் பரப்பபடுகின்றன. இது கவலை அளிக்கிறது. எங்கள் நிறுவனத்துக்கு என ஒரு கலாச்சாரம் இருக்கிறது. அது எல்லோரையும் உள்ளடக்கியது” என்றார்.

இது முதன்முறை அல்ல: ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக பாலின பேதக் குற்றச்சாட்டு எழுவது இது முதன்முறை அல்ல. ஓராண்டுக்கு முன்னர் பாலினத்தின் அடிப்படையில் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் மருத்துவக் காப்பீட்டில் பாகுபாடு, பணி நேரத்தை குறைத்தல் போன்ற கெடுபிடிகளைக் காட்டுவதாக பணியாளர் சங்கத்தில் புகார் எழுப்பப்பட்டது. ஆனால் அப்போது, ஸ்டார்பக்ஸ் நிறுவனம் 2012 ஆம் ஆண்டு முதலே தனது ஊழியர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை, முகத்தை பெண் போல் மாற்றுதல், மார்பகங்களை திருத்தியமைத்தல் போன்ற காஸ்மடிக் அறுவை சிகிச்சைகளுக்கும் கூட மருத்துவக் காப்பீடு தருவதாக அந்நிறுவனம் விளக்கியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.