மதுரை: உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு நேரடியாக கடிதம் அனுப்பக் கூடாது, பதவி உயர்வு, இடமாறுதல் கேட்டு நீதிபதிகளின் குடியிருப்புக்கு செல்லக் கூடாது என கீழமை நீதிபதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பிறப்பித்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ”கீழமை நீதிபதிகள் உயர் நீதிமன்ற நீதிபதிகளை சந்திக்கும்போது சால்வை, நினைவுப்பரிசு, பூங்கொத்து, மாலை, பழங்கள் மற்றும் பரிசுப் பொருட்களை கொடுக்கக்கூடாது. உயர் நீதிமன்ற நீதிபதிகளை வரவேற்க சாலையோரத்தில் கீழமை நீதிபதிகள் காத்திருக்கக்கூடாது. பதவி உயர்வு, பணியிடமாற்றம் மற்றும் சலுகைகள் கோரி உயர் நீதிமன்ற நீதிபதிகளின் குடியிருப்புகளுக்கு செல்லக்கூடாது.
உயர் நீதிமன்ற நீதிபதி தனிப்பட்ட பயணம் நீதிமன்ற பணி நேரமாக இருந்தால் மாவட்ட நீதிபதியால் நியமிக்கப்படும் ஊழியரும், நீதிபதியின் வருகை பணி நேரம் கடந்திருந்தால் புரோட்டாக்கால் பணியை மேற்கொள்ளும் நீதிபதி வரவேற்கவும், வழியனுப்பவும் செல்லலாம். உயர் நீதிமன்ற நீதிபதியின் பயணம் அலுவல் பயணம் பணி நேரத்தில் இருந்தால் ஊழியரும், பணி நேரம் கடந்திருந்தால் புரோட்டாக்கால் பணி ஒதுக்கப்பட்ட நீதிபதியும் வரவேற்க செல்ல வேண்டும். மற்ற நீதிபதிகள் செல்லக்கூடாது.
நீதிமன்ற பணி நேரத்தில் எக்காரணம் கொண்டும் கீழமை நீதிபதிகள் நீதிமன்றத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது. உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு நேரடியாக கடிதம் அனுப்பக்கூடாது. பதிவுத்துறை வழியாகவே கடிதம் அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பப்படும் கடிதங்கள் உரிய நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட நீதிபதிகளிடம் உடனுக்குடன் சேர்க்கப்படும். கீழமை நீதிபதிகள் வழக்கறிஞர்கள், வழக்கு தொடர்ந்தவர்களின் உபசரிப்புகளை பெறக்கூடாது. இதற்கு தடை விதிக்கப்படுகிறது.
உயர் நீதிமன்ற நீதிபதியின் பணயம் தனிப்பட்ட பயணமாக இருந்தால் அணிவகுப்பு மரியாதை வழங்க வேண்டியதில்லை. ஆனால் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். நீதிபதிகளின் தனிப்பட்ட பயண செலவுக்காக யாரிடமும் கீழமை நீதிபதிகள் உதவி பெறக்கூடாது. நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே கீழமை நீதிபதிகள் கருப்பு நிற கோட், கருப்பு நிற டை அணிவதை தவிர்க்க வேண்டும். பிற நிறத்திலான கோட் மற்றும் டை அணிய தடையில்லை. உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வருகையின் போது கீழமை நீதிபதிகள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல” என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.