கரூர்: கல் குவாரிகளில் டிஜிட்டல் சர்வேயை கைவிடக்கோரி குவாரி, கிரஷர், டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று (ஜூலை 2) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகளில் எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரின் டிஜிட்டல் சர்வே நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த டிஜிட்டல் சர்வே நடவடிக்கையை கைவிடக்கோரி கரூர் மாவட்ட குவாரி, கிரஷர், டிப்பர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனிடையே, டிஜிட்டல் சர்வேயை கைவிட வலியுறுத்தி, கரூர் மாவட்டம் பவித்திரம் அருகேயுள்ள புதுக்கநல்லி தனியார் இடத்தில் இன்று (ஜூலை 2ம் தேதி) நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதில் கல்குவாரி, கிரஷர், டிப்பர் லாரி உரிமையாளர்கள், ஊழியர்கள், லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. அதேபோல், குவாரிகள், கிரஷர்கள் இயக்கப்படவில்லை.