மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக வலுவான கூட்டணியை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல்வேறு தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ், இடதுசாரிகள், மற்றும் அந்த மாநிலங்களில் வலிமையாக இருக்கும் பிராந்திய கட்சிகள் ஓர் அணியில் திரண்டு பாஜகவை எதிர்க்க தயாராகி வருகின்றன.
எதிர்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் ஜூன் தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஜூன் 23ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டது.
இரண்டாவது கூட்டம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த கூட்டம் ஜூலை 13, 14ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் என மாற்றப்பட்டது. தற்போது இந்த கூட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பீகார், கர்நாடக மாநிலங்களில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற உள்ளதால் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பீகார் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 13, 14 ஆகிய தேதிகளில் எதிர்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றால் பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்வும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும்.
எனவே அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நிறைவடைந்த பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.