டைப்பே: தைவான் நாட்டில் முதலை கால் வறுவலுடன் வழங்கப்படும் நூடுல்ஸ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இன்று புதிது புதிதாக உணவகங்கள் வந்து புதிய வகையிலான உணவுகளை தயாரிக்கின்றன. சாக்லேட் இட்லி, சாக்லேட் தோசை, பேன்டாவில் வேக வைக்கப்படும் நூடுல்ஸ் உள்ளிட்ட புதிய உணவுகள் வந்துள்ளன.
இவற்றை மக்கள் வாங்குவதற்கு முன்னர் இது நன்றாக இருக்குமா , இல்லை வாங்கிவிட்டு அவதிப்பட வேண்டிய சூழல் ஏற்படுமா என யோசிப்பார்கள். முக்கியமாக பிடிக்காமல் வைத்துவிட்டால் பணத்தை இழக்கும் நிலை ஏற்படுமே என அஞ்சுவார்கள்.
இதே அந்த உணவு பிடித்துவிட்டால் அவர்கள் 4 பேருக்கு எடுத்துச் சொல்வார்கள். இது சைவ உணவுகளில் சரி! அசைவ உணவுகளில் கூட ஆடு, மாடு, கோழி, மீன், இறால், பன்றி உள்ளிட்டவைகளின் இறைச்சியை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். புதிய உணவுகளை பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் அசைவ உணவுகளிலேயே சில நாடுகளில் புதிய வகை உணவுகளை செய்கிறார்கள்.
அவற்றை அந்த நாட்டு மக்கள் விரும்புவார்கள். உதாரணமாக சீனாவில் ஒரு வகை எலியை அப்படியே பச்சையாக சாப்பிடுகிறார்கள். அது போல் பாம்பு கறி, தவளை கறி, வெட்டுக்கிளியை கூட உணவாக உட்கொள்கிறார்கள். ஆனால் இவற்றை நாம் பார்க்கும் போது அறுவறுப்பாக இருக்கிறது.
அந்த வகையில் தவளை, பல்லி , பாம்பு போய் இப்போது முதலை வரை வந்துவிட்டார்கள். ஆம் தைவானில் நுவு மா குயே என்ற ஹோட்டலில் ஒரு உணவிற்காக நிறைய கூட்டம் அலைமோதுகிறதாம். இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நூடுல்ஸ் நிரம்பிய கோப்பை ஒன்றில் வறுத்த முதலையின் கால் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த டிஷ் அங்குள்ள இளம் பெண்ணுக்கு பரிமாறப்படுகிறது. அதை அவர் ருசித்து சாப்பிட்டுள்ளார். முதலையின் கால்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். அந்த உணவுக்கு காட்ஜில்லா ராமென் என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் விலை இந்திய மதிப்பில் ரூ 3,900. இதற்காக டைட்டூன் மாகாணத்தில் இருக்கும் ஒரு முதலை பண்ணையில் இருந்து முதலைகளை வாங்குவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் முதலைக் கறி உணவுக்கு தைவானில் நல்ல வரவேற்பு உள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.