பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் தக்காளியுடன் சந்தைக்கு போன விவசாயிக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. தக்காளி விலை கிலோ 130க்கு விற்பனையாவதால், அவரது தக்காளிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டதால் அவருக்கு பணமழை கொட்டியது.
தக்காளி விலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. பெங்களூருவில் ஒரு தக்காளி ரூ.130-க்கு விற்பனை ஆகியது.
சரியான நேரத்தில் பருவமழை பெய்யாதது, மாறுபட்ட சிதோஷண நிலை, திடீரென தக்காளி விளைச்சல் வரும் நேரத்தில் பெய்த மழை, கடந்த முறை தக்காளி விலை அதாள பாதாளத்தில் இருந்ததால் பலரும் தக்காளி பயிரிட விரும்பாதது போன்ற பல்வேறு காரணங்களால் தக்காளி விளைச்சல் இந்தியா முழுவதும் கடுமையாகபாதிக்கப்பட்டது. இது ஒருபுறம் எனில், காய்கறிகள் விளைச்சலும், பருவ நிலை மாறுபாட்டால் பெரிய அளவில் குறைந்துள்ளது.
இதனால் காய்கறிகளுக்கும் தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பீன்ஸ், கேரட் பல காய்கறிகளின் விலையும் பல மடங்கு உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தக்காளி பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. கர்நாடக மாநிலம் கொப்பல் மார்க்கெட்டுக்கு அப்பகுதியை சேர்ந்த விவசாயியான சரணப்பா கார்டி என்பவர் தனது தோட்டத்தில் விளைவித்த தக்காளி பழங்களை அறுவடை செய்து ஒரு பெட்டியில் 24 கிலோ வீதம், 20 பெட்டிகளில் கொண்டு வந்துள்ளார்.

தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டு இருப்பதால், அவர் கொண்டு வந்த தக்காளி பழங்களுக்கு கூடுதல் விலை கிடைத்ததுடன், சீக்கிரமாக விற்று தீர்ந்துவிட்டது. அவரது ஒரு கிலோ தக்காளி ரூ.121-க்கு விற்பனை ஆனது. 24 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.2,904-க்கு விற்பனை ஆனது. மொத்தம் 20 பெட்டி தக்காளிக்கு ரூ58,080 அவருக்கு கிடைத்தது.
தக்காளி சாகுபடி செய்து கூடுதல் விலை கிடைத்த மகிழ்ச்சியில் சரணப்பா பெரும் மகிழ்ச்சி அடைந்தார். கர்நாடகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை தக்காளி ஒரு கிலோ ரூ.30-க்கு விற்றது. இதனால் தக்காளிக்கு போதிய விலை கிடைக்கவில்லை என கூறி கோலார், சிக்பள்ளாப்பூர், பெலகாவி, மைசூரு, மண்டியா உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் தக்காளிகளை சாலையில் கொட்டி சென்றார்கள். அதன்பின்னர் பலரும் தக்காளி பயிரிவில்லை. அதேநேரம் நஷ்டத்தை பற்றி கவலைப்படாமல் மீண்டும் பயிரிட்டவர்களுக்கு தக்காளி பெரிய அளவில் கைகொடுத்துள்ளது. விவசாயிகள் எப்போதாவது ஒருமுறை சிரிப்பார்கள். அது தக்காளியால் இப்போது தான் அபூர்வமாக நடந்துள்ளது.