ஐ.எஃப்.எஸ் மோசடி: வேலூரில் அதிரடிக் காட்டிய அமலாக்கத்துறை – ரேடாரில் முக்கிய பிரமுகர்கள்!?

மீண்டும் பரபரக்கத் தொடங்கியிருக்கிறது ஐ.எஃப்.எஸ் மோசடி விவகாரம். பொதுமக்களிடம் பல ஆயிரம் கோடியை வசூலித்து, மோசடி செய்த வேலூர் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் மீதான நடவடிக்கை ஓராண்டுக்குப் பின், இப்போது ‘புயல்’ பாய்ச்சலாக தீவிரம் அடைந்திருக்கிறது. ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தை, இயக்குநர்களாக இருந்து நடத்திவந்த சகோதரர்கள் லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், வேதநாராயணன், மோகன்பாபு ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டதால், அவர்கள் ‘தேடப்படும் குற்றவாளிகளாகவும்’ அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அதோடு, முக்கியமான ஏஜென்டுகள் 6 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களிடம் இருந்து ரூ.1.14 கோடி ரொக்கப் பணம், ரூ.39 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள், 18 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், 791 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.121 கோடி பணமும் முடக்கப்பட்டிருக்கிறது.

மோசடி சகோதரர்கள்

சமீபத்தில், முன்னாள் போலீஸ்காரரான ஹேமந்திரகுமார் என்பவரையும் சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். ஹேமந்திரகுமார், முதன்மைக் காவலராக பணியாற்றியபோது, ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்தின் ஏஜென்டாகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். காவல் பணியில் கிடைக்கும் சம்பளத்தைவிட ஏஜென்ட் கமிஷன் பலமடங்கு அதிகமாகக் கிடைத்ததால், காவலர் பணியில் இருந்து அவர் விருப்ப ஓய்வு பெற்றதாகக் கூறப்படுகிறது. கைதுக்கு பின்னர், அவரின் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

தமிழக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் ஒருபுறம் கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஐ.எஃப்.எஸ் நிறுவனம் மீதான பிடியை மேலும் இறுக்கியிருக்கிறார்கள். வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் இந்த மோசடியின் மூலகர்த்தாக்களான சகோதரர்கள் நால்வரும் சரணடைய ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் அனுப்பிய சூழலில், வேலூரில் இன்று காலை, ஐ.எஃப்.எஸ் நிறுவன இயக்குநர்களின் உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.

சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்

சத்துவாச்சாரி வள்ளலார்ப் பகுதி, ரங்காபுரம், வேலப்பாடி, காட்பாடி அடுத்த செங்குட்டை என 4 இடங்களிலுள்ள வீடுகளில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கெனவே, ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனத்திடம் இருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் தமிழக காவல்துறை அதிகாரிகள் சிலர் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில், முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் சிலரின் பெயர்களும் அடிபடுவதால், ஐ.எஃப்.எஸ் மீதான அமலாக்கத்துறையின் விசாரணை அரசியல் வட்டாரத்திலும் ரெய்டு புயலைக் கிளப்பியிருக்கின்றன. ஐ.எஃப்.எஸ் இயக்குநர்கள் நால்வரும் சேர்ந்து, அரசியல் கட்சிகளின் பிரமுகர்களையும், பிரபலங்கள் பலரையும் அழைத்துவந்து பண வசூல் நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தினார்கள். அந்தப் புகைப்படங்கள் இப்போதும் சமூக வலைதளங்களில் சுழன்றடித்துகொண்டிருக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.