வசந்த் ரவிக்கு ஜோடியான தனுஷ் பட நாயகி

தரமணி, ராக்கி படத்தில் நடித்த வசந்த் ரவி கடைசியாக 'அஸ்வின்ஸ்' படத்தில் நடித்தார். தற்போது 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் நேற்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த படத்தை ஜெ.எஸ்.எம். புரோடக்ஷன்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் இர்பான் மாலிக்கும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

ஐரா, நவரசா போன்ற படங்களில் இணை இயக்குனராக பணியாற்றி பின்னர் 'வி ஆர் பிரெக்னன்ட்' என்ற தொடரை இயக்கிய சபரீஷ் நந்தா இயக்குகிறார். வசந்த் ரவிக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசடா நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 'பட்டாஸ்' படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். 'விஸ்வாசம்' படத்தில் அஜித் மகளாக நடித்து புகழ் பெற்ற அனிகா சுரேந்திரன், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற 'புஷ்பா' படத்தில் நடித்த சுனில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நடன இயக்குனர் கல்யாண் முதல் முறையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிராபகரன் ராகவன் ஒளிப்பதிவு செய்கிறார். அஜ்மல் தசீன் இசையமைக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.