ஹைதராபாத்: தெலங்கானாவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 900 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் ஹரீஷ் ராவ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில மருத்துவம் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஹரீஷ் ராவ் நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் 2023-24-ம் கல்வி ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,118 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரித்துள்ளன. இதில் தெலங்கானாவில் மட்டும் 900 இடங்கள் அதிகரித்துள்ளன. இது, நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக சேர்க்கப்பட்ட இடங்களில் 43 சதவீதம் ஆகும். இதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.