தருமபுரி: தருமபுரி வனக்கோட்டத்தின் வன வளத்தை காக்கும் வகையில் வனப்பகுதிகளில் வெள்ளாடுகள் மேய்க்க அனுமதி இல்லை என்று மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருமபுரி வனக் கோட்டம் 1 லட்சத்து 64 ஆயிரத்து 903.587 ஹெக்டேர் பரப்பளவில் 136 காப்புக்காடுகள் மற்றும் 18 காப்பு நிலங்களை உள்ளடக்கிய தமிழகத்தின் மிகப்பெரிய வனக் கோட்டம் ஆகும். கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது தருமபுரி மாவட்டத்தில் தற்போது சட்ட விரோதமாக பட்டிகளை அமைத்து ஆட்கள் தங்கி கால்நடைகள் மேய்த்தல், வன விலங்குகளை வேட்டையாடுதல், விலையுயர்ந்த மரங்களை வெட்டுதல், வன நிலத்தை ஆக்கிரமித்தல், இயற்கையாக வளரும் மரங்களின் மறு உற்பத்தியை தடுத்தல், காப்புக்காட்டில் செயற்கையாக தீ ஏற்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் காடுகளின் தரம் குறைந்து வன உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
மரபுவழி வன வாழ்வினர் சட்டத்தின்படி மாவட்ட அளவிலான குழுவால் அங்கீகரிக்கப்பட்ட வனக் குழுவினர் வாழ்வாதாரத்துக்காக வனத்தில் கிடைக்கும் புளி, புங்கன்கொட்டை, வேப்பங்கொட்டை, தேன், ஈஞ்ஜி போன்ற வனப்பொருட்களை சேகரித்து வருமானம் ஈட்டுகின்றனர். வனத்திலேயே குழந்தைகள் உள்ளிட்டோருடன் தங்கி சிறுவன மகசூல் சேகரிப்பவர்களுக்கு வன விலங்குகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, காலை 6 முதல் மாலை 5 மணி வரை காப்புக்காட்டில் சிறுவன மகசூலை சேகரித்துக் கொண்டு வனத்தை விட்டு வெளியேறி விட வேண்டும்.
காப்புக்காடுகளுக்குள் கால்நடை பட்டி அமைத்து இரவில் வனத்திலேயே தங்கிட அனுமதிக்க முடியாது. பட்டி அமைப்போர் நாய்கள் மூலமும், கண்ணி வைத்தும் நாட்டுத் துப்பாக்கிகள் மூலமும் வேட்டையில் ஈடுபடுகின்றனர். மனித இடையூறு காரணமாக காப்புக்காடுகளில் இருந்து யானைகள் விளைநிலங்களை நோக்கி வெளியேறுகின்றன. முற்றிலும் ஆள் நடமாட்டமின்றி வன விலங்குகள் பாதுகாப்பாக வசிக்கவே வனவிலங்கு சரணாலயங்கள் உருவாக்கப்படுகின்றன. வன வளம், மண் வளம் பாதிக்கப்பட்டால் கார்பன் வெளியேற்றம் அதிகரித்து பருவநிலை மாற்ற நிகழ்வுகளும் ஏற்படும்.
இதையெல்லாம் தடுக்க தருமபுரி மாவட்ட வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நபார்டு வங்கி உதவியுடன் வனத்தில் மரக்கன்று நடவு, மண் வளம் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்புக்காக தடுப்பணைகள் மற்றும் கசிவுநீர் குட்டைகள் அமைத்தல், தீ ஏற்படுவதை தடுக்க தீ தடுப்பு கோடுகள் ஏற்படுத்துதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும்போது, இதுநாள் வரை வனத்தில் தங்கி லாபம் அடைந்தவர்கள் தற்போது வனத்துறைக்கு எதிரான தகவல்களை பரப்புகின்றனர். மாடு மற்றும் செம்மறி ஆடுகளை வனத்தில் மேய்க்க விரும்புவோர் அவைகளுக்கு உரிய தடுப்பூசிகளை செலுத்தி காப்பீடு செய்து ஆவணங்களுடன் வனச் சரக அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம். அதன்மூலம் இலவச அனுமதி சீட்டு பெற்று, வனத்தின் மூடப்பட்ட பாகங்கள் தவிர்த்த இதர பகுதிகளில் கால்நடைகளை பகலில் மேய்த்துக் கொண்டு மாலையில் வெளியேறி விட வேண்டும். அதேநேரம் வனத்தில் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு அனுமதிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.