சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் படம் உருவாகியுள்ளது.
மாவீரன் படத்திற்கு முன்னதாக மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் மண்டேலா என்ற படத்தை கொடுத்திருந்தார். இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது.
இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் ஜூலை 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
மாவீரன் படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை பாராட்டிய சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன. தயாரிப்பாளராகவும் டாக்டர் மற்றும் டான் படங்களில் அவர் மிளிர்ந்துள்ளார். ஆனால் கடைசியாக வெளியான பிரின்ஸ் படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. வசூலிலும் சொதப்பியது. இந்நிலையில் தற்போது இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இந்தப் படம் ஆகஸ்ட்டில்தான் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்டில் ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மாவீரன் படம் முன்னதாகவே தன்னுடைய ரிலீஸ் தேதியை லாக் செய்துள்ளது. இந்நிலையில் இந்தப் படம் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ரிலீசாகவுள்ளது. தெலுங்கிலும் சிவகார்த்திகேயனுக்கு அதிகமான ஃபேன்பேஸ் காணப்படுவதால் படக்குழுவினர் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதுகுறித்து நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், தன்னுடைய மெரினா படத்தின் இசை வெளியீட்டில் 50 பேர் மட்டுமே பங்கேற்றதாகவும், தற்போது மாவீரன் படத்தின் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ரசிகர்கள் கூட்டம் தன்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை சரிதா, இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டவர்கள், சிவகார்த்திகேயனை குட்டி சூப்பர்ஸ்டார் என்று பாராட்டினர். இதன் ஒளிபரப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு சன் டிவியில் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் சேனலும் இதற்கான ப்ரமோ ஒன்றை வெளிட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காக பேட்டிகளையும் படக்குழுவினர் கொடுத்து வருகின்றனர்.
தனது பேட்டியொன்றில் பேசிய சிவகார்த்திகேயன், படத்தில் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாகவும் புதுமையாகவும் அமைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ரசிகர்களை கவரும் வகையிலும் இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆக்ஷன் காட்சிகளில் மற்ற படங்களில் இருந்து தான் வித்தியாசப்பட்டு தெரிவேன் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இந்தப் படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ள நிலையில், தற்போது ஐதராபாத்தில், படத்தின் தெலுங்கு பிரீ ரிலீஸ் விழா நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.