Dhanush 50 – தனுஷ் 50.. ஷூட்டிங்கே தொடங்கல அதற்குள் வேலையை ஆரம்பித்த ஏ.ஆர்.ரஹ்மான்?

சென்னை: Dhanush 50 (தனுஷ் 50) தனுஷ் இயக்கி அவரே நடிக்கும் அவரது 50ஆவது படத்தின் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

நடிகராக திரைத்துறைக்குள் நுழைந்த தனுஷ் ஆரம்பத்தில் பல போராட்டங்களை சந்தித்தவர். ஆனால் திறமை இருந்தால் போதும் சினிமாவில் வெல்லலாம் என்பதற்கு உதாரணமாக இப்போது அவர் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என கலக்கிவருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வாத்தி படம் வெளியானது. இப்போது கேப்டன் மில்லர் படம் தயாராகியிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார். வாத்தி கொடுத்த அடிக்கு கேப்டன் மில்லர் மருந்து போடும் என்ற எதிர்பார்ப்பில் தனுஷும், அவரது ரசிகர்களும் இருக்கின்றனர். மும்முரமாக அதில் நடித்துவந்த தனுஷ் தனக்கான ஷூட்டிங்கை முடித்துவிட்டதாக தெரிகிறது. இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

தனுஷ் 50: கேப்டன் மில்லர் படத்துக்கு பிறகு தனுஷ் தனது 50ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். வேறு யாரையும் இயக்கவிடாமல் அந்தப் படத்தை தானே இயக்குவதற்கு ரெடியாகிவிட்டார். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சில நாட்களுக்கு முன்பு போஸ்டருடன் வெளியானது. பவர் பாண்டி படத்தை ஏற்கனவே தனுஷ் இயக்கி வெற்றி பெற்றிருப்பதால் இப்படமும் வெற்றி பெறும் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.

கதைக்களம் என்ன?: படத்துக்கு ராயன் என பெயர் வைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் படத்தின் கதைக்களமானது வடசென்னையை மையப்படுத்தி எடுக்கபப்டும் என்றும் அதற்காக சென்னையில் 100 வீடுகள் கொண்ட செட் போடப்படும் என்றும் தெரிகிறது. இதற்கான பணிகளிலும் தனுஷ் இறங்கியிருக்கிறார் என்று கோலிவுட்டி பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தில் யார் யார்?: படத்தில் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தவிர துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இதில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கலாம் என தெரிகிறது. தனுஷுக்கு 50ஆவது படம் அவரது அடையாளங்களில் ஒன்றாக மாற வேண்டும் என்ற முனைப்பில் பெரிய டீமே களமிறங்கியிருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான்: படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார் என்று சில மாதங்களாகவே பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனுஷ் 50ஆவது படத்துக்கான ஷூட்டிங்கே இன்னும் தொடங்கப்படாத சூழலில் படத்துக்கான இரண்டு பாடல்களை முடித்துவிட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசையமைப்பில் கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.